NATIONAL

ஆற்றில் மூழ்கியவர்களை காப்பாற்றும் போது நேர்ந்த துயரம்- ஆடவர் நீரில் மூழ்கி மரணம்

லஹாட் டத்து, ஜூன் 21- ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச்
செல்லப்பட்ட சகோதரரையும் உறவுக்காரச் சிறுவனையும்
காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த ஆடவர் நீரில் மூழ்கி பரிதாபமாக
உயிரிழந்தார்.

முப்பத்து மூன்று வயதுடைய அந்த ஆடவர் நேற்று காலை 11.00
மணியளவில் தன் குடும்பத்தினருடன் இங்குள்ள சுங்கை டேவாத்தாவில்
குளிக்கச் சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக லஹாட் டத்து மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி ஜூல்பஹ்ரின் இஸ்மாயில் கூறினார்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 16 வயதுடைய தன் தம்பியும் 10
வயதான தன் உறவுக்காரச் சிறுவனும் திடீரெ கைகளை அசைத்து உதவிக்
கோரி கூச்சலிட்டுள்ளனர். இதனைக் கண்ட பாதிக்கப்பட்ட நபரும் மேலும்
இரு உறவினர்களும் ஆற்றில் குதித்துள்ளனர். அச்சிறுவர்கள் இருவரும்
காப்பாற்றப்பட்ட வேளையில் அவர்களில் ஒருவர் மட்டும்
கரையேறவில்லை என அவர் சொன்னார்.

உறவினர்கள் அனைவரும் விரைந்து தேடிய போது மயக்கமடைந்த
நிலையில் அந்த ஆடவர் கண்டு பிடிக்கப்பட்டார். அவர் உடனடியாக 32
கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லஹாட் டத்து மருத்துவமனைக்குக்
கொண்டுச் செல்லப்பட்டார். எனினும், அவர் இறந்து விட்டதை
மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்று ஜூல்பஹ்ரின் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.


Pengarang :