NATIONAL

சுங்கை பாக்காப் தொகுதியில் நாளை வேட்புமனுத் தாக்கல்

நிபோங் திபால், ஜூன் 21- சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதிக்கான
இடைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வுடன் நாளை தொடங்குகிறது.
இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தாமான் டேசா ஜாவி, டேவான்
செர்பகுணாவில் நடைபெறும்.

காலை 9.00 மணி தொடங்கி 10.00 மணி வரை வேட்பு மனுவைத் தாக்கல்
செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ள வேளையில் தகுதி உள்ள
வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவிப்பார்.

இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு 14 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடவிருக்கும்
வேட்பாளர்களின் பெயரை அறிவிக்கப்பட்டவுடன் தொடங்கும் பிரச்சாரம்
வரும் ஜூலை 5ஆம் தேதி இரவு மணி 11.59க்கு முடிவுறும்.

நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்றத்
தொகுதிகளில் ஒன்றாக சுங்கை பாக்காப் விளங்குகிறது.

அமினுடின் பாக்கி கல்விக் கழக வட பிராந்தியத்தின் முன்னாள் இயக்குநர்
டாக்டர் ஜொஹாரி அரிபின் (வயது 60) பக்கத்தான்- பாரிசான் நேஷனல்
கூட்டணியின் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வேளையில்
பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் நிபோங் திபால் தொகுதி பாஸ் கட்சித்
தலைவரும் முன்னாள் போக்குவரத்து நிறுவன நிர்வாக அதிகாரியுமான
அபிடின் இஸ்மாயில் (வயது 50) வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

இந்த இடைத் தேர்தலில் பக்கத்தான்-பாரிசான் கூட்டணிக்கும்
பெரிக்கத்தான் நேஷலுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என
எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008 முதல் மூன்று தவணைகளாகப் பி.கே.ஆர்.
வசமிருந்து கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் வசம் வீழ்ந்த
இத்தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதில் பி.கே.ஆர். கட்சியை
பிரதிநிதிக்கும் ஜோஹாரி கடுமையாகப் பாடுபடுவார் என கருதப்படுகிறது.

இந்த தொகுதியில் 39,279 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களில் 57 பேர் போலீஸ்காரர்களாவர்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை நடைபெறவுள்ள
வேளையில் தொடக்க கட்ட வாக்களிப்பு எதிர்வரும் ஜூலை 2ஆம் தேதியும்
தேர்தல் ஜூலை 6ஆம் தேதியும் நடைபெற தேர்தல் ஆணையம் நாள்
குறித்துள்ளது.

சுங்கை பாக்காப் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜாம்ப்ரி லத்திப்
நோய் காரணமாகக் கடந்த மே 24ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :