NATIONAL

போதை மாத்திரைகள் கடத்தல்- ஒரு பெண் உள்பட நால்வர் கைது

கோத்தா பாரு, ஜூன் 21- ஜெலி, கம்போங் லாகோத்தாவிலுள்ள்
இலக்கமில்லா வீடொன்றில் 2,170 போதை மாத்திரைகளைக் கடத்திய
சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

உள்நாட்டினரான அந்த நால்வரிடமிருந்து மிட்சுபிஸி ட்ரைட்டோன்
வாகனம், புரோடோன் சத்ரியா கார் உள்பட 64,660 வெள்ளி மதிப்புள்ள
பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஜெலி மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் சஹாரி யாக்கோப் கூறினார்.

நேற்று காலை 10.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்
பொருளுக்கு எதிரான ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையில் 22
முதல் 45 வயது வரையிலான அந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்
என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் 2,000 யாபா ரக போதை
மாத்திரைகள் அடங்கிய 10 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் காகிதம் ஒன்றில்
சுற்றப்பட்டிருந்த வேளையில் மற்றொரு பையில் 170 போதை
மாத்திரைகளும் ஐந்து லிட்டர் கெத்தும் நீரும் கண்டுபிடிக்கப்பட்டன என்று
அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில்
அவர்கள் அனைவரும் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை
உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அந்நால்வரும் குற்றச்செயல்
மற்றும் போதைப் பொருள் தொடர்பில் முந்தைய குற்றப்பதிவுகளைக்
கொண்டிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்
பொருள் சட்டத்தின் 39பி பிரிவு மற்றும் 1988ஆம் ஆண்டு (சொத்து
பறிமுதல்) அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில் கைதான நால்வரும் நேற்று தொடங்கி வரும் 26ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :