NATIONAL

பலத்த அலைகள் படகை கவிழ்த்ததில் ஒருவர் பலி

பத்து பகாட், ஜூன் 23: கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சோங் செகன்திங்கிலிருந்து தென்மேற்கே 6.8 கடல் மைல் தொலைவில் நான்கு பேருடன் சென்ற  மீன்பிடி படகு கவிழ்ந்ததில் படகின் கேப்டன் காணாமல் போனார். பின்னர், அவர் நீரில் மூழ்கி இறந்தது நேற்று மாலை 7 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

படகு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு மீனவரால் சியா கா சோங்கின் (51) சடலம் கண்டுபிடிக்கப் பட்டதாகப் பத்து பகாட் கடல்சார் மண்டல இயக்குநர் கமாண்டர் முகமட் ஹனிஃப் முகமட் யூனுஸ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பத்து பகாட் படகு துறைக்கு (ஜெட்டிக்கு) எடுத்துச் செல்லப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டது. பின்னர், சடலம் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.

மேலும், காணாமல் போன லீ பாங் லிங் (68), தான் ஹாய் கியான் (62), மற்றும் ராவுட் டாருஸ் @ ஹமீட் (53) ஆகியோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

காலை 6 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், குறிப்பிட்ட ஐவரும் பயணித்த படகு மோசமான வானிலை காரணமாகப் பலத்த அலைகளால் தாக்கப்பட்டு கவிழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இருப்பினும், இச்சம்பவத்தில் தான் சியாக் பின் (43) என்பவர் உயிர் தப்பினார்.

– பெர்னாமா


Pengarang :