NATIONAL

போர்ட் கிள்ளானில் அந்நிய நாட்டினருக்கு எதிராக குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனை

போர்ட் கிள்ளான், ஜூன் 24 – மலேசிய குடிநுழைவுத் துறையின்  சிலாங்கூர் மாநில அமலாக்கப் பிரிவினர்  நேற்று இங்குள்ள பண்டார் சுல்தான் சுலைமான், ஜாலான் சுல்தான் அப்துல் சமாட் 38 இல் உள்ள குடியிருப்புப்  பகுதியில் ஒருங்கிணைந்த அதிரடிச் சோதனை  நடவடிக்கையை மேற்கொண்டனர். இச்சோதனையின் போது  சுமார் 1,700 வெளிநாட்டினர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மூன்று மாதங்களுக்கும் மேலாகக் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட  உளவு நடவடிக்கையின் பலனாக வங்காளதேசம், பாகிஸ்தான், மியான்மர் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரின் குடியிருக்கும் வீடுகள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டன என்று அதன் இயக்குனர் கைருள் அமினுஸ் கமாருடின் கூறினார்.

அந்த பகுதியில் வெளிநாட்டினர் அதிகமாக குடியிருப்பது தொடர்பல் குடியிருப்பாளர்களிடமிருந்தும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் தங்களுக்கு பல புகார்கள் வந்ததாக நேற்றைய சோதனை நடவடிக்கையின் போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அவர்களில் சிலர் நாட்டில் தங்குவதற்கு செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்களைக் கொண்டிராதது மற்றும் அனுமதி பாஸின் நிபந்தனைகளை மீறி அதிக நாட்கள் தங்கியிருப்பது உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்தது முதல் கட்ட ஆய்வில்  கண்டறியப்பட்டது என அவர் சொன்னார்.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் குடிநுழைவுத் துறை, மத்திய பொது நடவடிக்கைப் படை பிரிவு, சிலாங்கூர் தேசியப் பதிவுத் துறை,  கிள்ளான் அரச மாநகர் மன்றம் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு ஆகியவற்றின் 298 அமலாக்கத் துறையினர்  ஈடுபட்டதாகக் கைருல் அமினுஸ் கூறினார்.

வெளிநாட்டினருக்கான ஆவணப்படுத்தல் செயல்முறை இன்னும் நடந்து வருவதால் 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் மற்றும் பிற குற்றங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது குற்றங்களைச் செய்தவர்களின் துல்லியமான  எண்ணிக்கையை தற்போதைக்கு வழங்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

மாலை 5 மணியளவில் நடந்த சோதனையின் போது பெரும்பாலான வெளிநாட்டினர் தங்கள் வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்தி கால்பந்து விளையாடுவதிலும் குடியிருப்புப் பகுதியில் உள்ள இரவு சந்தையில் தேவையான பொருட்களை வாங்குவதிலும் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தனர்.


Pengarang :