NATIONAL

சிப்ஸ் 2024 மாநாட்டில் அதிக வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்பு-  வெ.700 கோடி வர்த்தக இலக்கு

சுபாங் ஜெயா, ஜூன் 24- சிலாங்கூர் அனைத்துலக  உச்சநிலை மாநாட்டை (சிப்ஸ்) பிரபலப்படுத்தும்  இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட்டின் முயற்சி ஆக்ககரமானப் பயனைத் தந்துள்ளது. இவ்வாண்டிற்கான மாநாட்டில் அதிக வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கேற்பின் வழி இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைத் தேடுவதற்காக மாநில அரசின் அந்த துணை நிறுவனம்  சமீப ஆண்டுகளில் இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட வெளிநாடுகளில்  விளம்பரத் தொடர்களை தீவிரமாக நடத்தி வந்ததாக முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த முயற்சிக்கு கிடைத்த ஆதரவு  மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்த சிப்ஸ் மாநாட்டில் வெளிநாட்டு நாடுகள் மட்டுமல்லாமல் பல உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளும் பங்கு கொள்ள விரும்புகின்றன என அவர் சொன்னார்.

ஆகவே, இவ்வாண்டு நாங்கள் இரண்டு முறை இந்த மாநாட்டை ஏற்பாடு செய்கிறோம். அதன் வழி அதிகமான நிறுவனங்கள் பங்கேற்க முடியும். இது பொருளாதார வளர்ச்சிக்கும்  பயனளிக்கும் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற பூச்சோங் சமூக கலை விழாவை தொடக்கி வைத்தப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைக்  கூறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதன் முதலில் நடத்தப்பட்ட இந்த சிப்ஸ் மாநாட்டில்  சீனா, ஜப்பான், உகாண்டா, கஜகஸ்தான், கொரியா, துருக்கி, கென்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் பல்வேறு அரசு நிறுவனங்களும் பங்கேற்றன.

இவ்வாண்டு, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில்  நடைபெறும் இந்த ஆறாவது உச்சநிலை மாநாட்டில் 700 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டு பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Pengarang :