NATIONAL

காவல்துறையினர் வாகனம் மீது மோதிய நபருக்கு துப்பாக்கி சூடு

கோலாலம்பூர், ஜூன் 24: கடந்த வெள்ளிக்கிழமை செரெண்டா, சிலாங்கூரில் சந்தேக நபர் ஒருவர் ஓட்டி சென்ற கார் காவல்துறையினர் வாகனம் மீது மோதிய சம்பவத்தில் அந்நபர் காவல் துறையினரால் சுடப்பட்டு காயமடைந்தார்.

மாலை 4.40 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், முவாலிம் பேராக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் குழுவால் சந்தேகத்திற்கிடமான நிலையில் 30 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற வாகனம் அடையாளம் காணப்பட்டது என உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மட் ஃபைசல் தஹ்ரிம் கூறினார்.

சந்தேக நபரின் கார் செரண்டா பகுதியில் உள்ள உணவுக் கடையின் முன் நிறுத்தப்பட்டதை அடுத்து, இரண்டு வாகனங்களுடன் காவல்துறையினர் வழியைத் தடுத்தனர். ஆனால, சம்பந்தப்பட்ட நபர் காவல்துறையினரின் வாகனத்தின் மீது மோதி உறுப்பினர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

“சந்தேக நபரின் வாகனத்தின் மீது காவல்துறையினரின் குழு பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. பின்னர், சோதனையில் துப்பாக்கிச் சூட்டில் அந்நபருக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர் செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் அஹ்மட் பைசல் கூறினார்.

14 குற்றப் பதிவுகளைக் கொண்ட அந்நபர் ஜூன் 28 வரை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார் மற்றும் கொலை முயற்சி குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் 307வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :