NATIONAL

போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு- எண்மர் கைது

ஜோகூர் பாரு, ஜூன் 25- இம்மாதம் 14ஆம் தேதி இங்குள்ள தாமான் அபாட்டில் போலீசாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டச் சம்பவத்தின் வாயிலாக ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கும்பலின் எட்டு உறுப்பினர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்த அதே தினத்தன்று வாஹிஹானா, கெம்பாஸ் உத்தாமா மற்றும் தாமான் அபாட்டில் உள்ள ஹோம் ஸ்டேய் எனப்படும்  தங்கும் குடியிருப்பு மற்றும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் கூறினார்.

நான்கு ஆண்கள் மற்றும் ஒரு அந்நியப் பிரஜை உள்பட மூன்று பெண்களை உள்ளடக்கிய அவர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று அர் சொன்னார்.

இச்சோதனை நடவடிக்கையில் மூன்று கைத்துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி போன்ற தோற்றமுடைய நான்கு பொருள்கள், 141 தோட்டாக்கள், கத்தி, கைவிலங்கு, காவல் துறையினர் பயன்படுத்தும் பல்வேறு உபகரணங்கள், போதைப்  பொருள், காவல் துறையினரின் போலி அடையாள அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போலி போலீஸ் அடையாள அட்டைகளில் ஒன்று துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபரின் பெயரைக் கொண்டிருந்தது. ஆயுதங்களையும் போதைப் பொருளையும் கடத்துவதற்கு அக்கும்பல் இந்த போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் எழுவருக்கு எதிராக குற்றச் செயல் மற்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றப்பதிவுகளும் ஒரு நபருக்கு எதிராக போதைப் பொருள் தொடர்பான குற்றப்பதிவும் இருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

போலீசாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த 42 வயது ஆடவன் இக்கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :