NATIONAL

டுரியான் தோட்டத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு காணாமல் போன இளைஞருடையது

பத்து பஹாட், ஜூன் 25 – இங்குள்ள காம்ப்ளெக்ஸ் பெங்குளு முக்கிம் லீனாவ் அருகே டுரியான் தோட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூடு காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட இளைஞருடையது என்பது அவரின் குடும்பத்தினர் மூலம் உறுதி செய்யப்பட்டது.

கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் காணாமல் போன ஃபௌசான் அப்துல் ஹலிட் (வயது 16) என்பவருடையது என நம்பப்படும் அந்த எலும்புக்கூடுடன் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அவரின் ஆவணங்கள் மற்றும் பொருள்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக பத்து பஹாட் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஷாருள்அனுவார் அப்துல்லா சானி கூறினார்.

மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியேறிய பண்டார் புத்ரா இண்டாவைச் சேர்ந்த அந்த ஐந்தாம் படிவ மாணவர் பின்னர் வீடு திரும்பவில்லை என அவர் சொன்னார்.

ஜாலான் யோங் பெங்-மூவார் சாலையோரம் நேற்று காலை 11.15 மணியளவில் அந்த இளைஞரின் சடலத்தை பொது மக்கள் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. அவ்வாடவர் சாலை விபத்தில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த இளைஞர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மின்கம்பத்தை மோதியுள்ளது. இதன் காரணமாக மோட்டார் சைக்கிளிலிருந்து அவர் தூக்கியெறியப்பட்டு சரிவான பகுதியிலுள்ள புதரில் விழுந்துள்ளார் என அவர் சொன்னார்.


Pengarang :