NATIONAL

யூரோ 2024 கால்பந்தாட்டச் சூதாட்டம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது

கோலாலம்பூர், ஜூன் 27- ஓப் சோகா நடவடிக்கையின் கீழ் கடந்த
திங்கள்கிழமை தொடங்கி நேற்று அதிகாலை வரை போலீசார்
மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில் யு.இ.எப்.ஏ. 2024 ஐரோப்பிய
கால்பந்து போட்டியின் முடிவுகள் மீது சட்டவிரோதப் பந்தயம் நடத்திய
சந்தேகத்தின் பேரில் ஒரு வெளிநாட்டவர் உள்பட மூன்று மூவர் கைது
செய்யப்பட்டனர்.

செராஸ் வட்டாரத்தின் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட
அச்சோதனைகளில் 40 மற்றும் 44 வயதுடைய உள்நாட்டினரும் 34
வயதுடைய வெளிநாட்டு ஆடவரும் கைது செய்யப்பட்டதாகச் செராஸ்
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவீந்தர் சிங் சர்பான் சிங் கூறினார்.

அந்த மூவரும் தனித்தனியாக செயல்பட்டதோடு சூதாட்டத் கும்பலின்
முகவர்களாகச் செயல்பட்டு கால்பந்து முடிவுகள் தொடர்பில் பந்தயம்
நடத்தியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று
அவர் சொன்னார்.

தங்களை சூதாட்டத் தரகர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது
என்பதற்காக அவர்கள் தனித் தனியாகச் செயல்பட்டு பந்தயப் பணத்தை
வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அம்மூவரிடமிருந்தும் கைபேசிகளைப் பறிமுதல் செய்த போலீசார் அதில்
கால்பந்து சூதாட்டம் தொடர்பான செயலியும் பந்தயம் தொடர்பான
உரையாடல்களும் பதிவாகியுள்ளதைக் கண்டனர்.

உள்நாட்டு ஆடவர்கள் இருவரும் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள
வேளையில் வெளிநாட்டு ஆடவர் எதிர்வரும் 28ஆம் தேதி வரை தடுத்து
வைக்கப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.


Pengarang :