NATIONAL

பிரதமர் துறையின் பாராட்டு விருந்தில் 1,019 ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்

புத்ராஜெயா, ஜூன் 27- பிரதமர் துறையின் 2024ஆம் ஆண்டிற்கான பாராட்டு
விருந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்றிரவு
இங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பாகப் பணியாற்றிய மற்றும் ஓய்வு
பெற்ற ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

புத்ரா ஜெயா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாகப்
பணியாற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் நோக்கிலும் தங்கள் சேவை
காலத்தில் நிறைவான பங்களிப்பை வழங்கிய ஓய்வு பெற்ற
பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.

அரசு ஊழியர்கள் தொடர்ந்து முழு ஈடுபாட்டுடனும் ஆக்கத்தன்மையுடனும்
பணியாற்றி நாட்டின் மேம்பாட்டிற்கு உரிய பங்களிப்பை வழங்குவதற்குரிய
உந்துதலை வழங்குவதை இந்த சிறந்த ஊழியர்களுக்கான விருதளிப்பு
நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் மொத்தம் 1,019 பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். 2021
முதல் 2023 வரைக்குமான காலக்கட்டத்தில் சிறப்பான சேவையை
வழங்கிய ஐவருக்கு சிறந்த சேவை விருது வழங்கப்பட்டது. இது தவிர
2023ஆம் ஆண்டிற்கான சிறந்த பணியாளர் விருதை 881 பேர் பெற்ற
வேளையில் இவ்வாண்டு ஓய்வு பெறும் 133 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், அரசு நிர்வாகத்தின் உயிர்நாடியாக
பொதுச் சேவைத் துறை அரசாங்கம் மாறினாலும், தலைவர்கள்
மாறினாலும் எப்போதும் மாறாதிருக்கும் என்று கூறினார்.

ஆகவே. தங்கள் கடமைகளை ஆற்றுவதில் அரசு ஊழியர்கள் முழு
ஈடுபாடு, அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் உயர் நெறியைக் கொண்டிருக்க
வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :