NATIONAL

 17 தொழில் சாலை ஊழியர்கள், ரசாயனக் கசிவால் பாதிப்பு

சுங்கை பட்டாணி, ஜூன் 28: நேற்று, பக்கர் அராங்கில் ரப்பர் அடிப்படையிலான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் 16 ஊழியர்கள் கண் எரிச்சல் மற்றும் தலைச் சுற்றலால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், ஒருவர் மயக்கம் அடைந்துள்ளார். இச்சம்பவம் ரசாயனக் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாகப் பிற்பகல் 3.04 மணிக்கு செயல்பாட்டு மையத்திற்கு MERS 999 லைன் மூலம் சோடியம் ஹைபோகுளோரைட் கசிவு ஏற்பட்டதாக புகாரளிக்கப்பட்டது என மூத்த கமாண்டர் ஃபௌசி ஷுயிப் கூறினார்.

“PGO கெடா சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மற்றும் தொழிற்சாலையில் ரசாயனக் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

“பிற்பகல் 3 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், மயக்கமடைந்த நபர்  சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதே நேரத்தில் கண் எரிச்சல் ஏற்பட்டவர்கள் அருகிலுள்ள கிளினிக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சோடியம் ஹைபோகுளோரைட் ரசாயன கசிவு 60 லிட்டர் என மதிப்பிடப்பட்டது மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி அந்த இடத்தில் கிருமி நீக்கம் செய்யப்பட்டது.

“மாலை 5.23 மணியளவில், பாதிக்கப்பட்ட ஏழு ஊழியர்கள் மேல் பரிசோதனைகளுக்காக சுகாதார அமைச்சகத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

மேலும், ஆபத்தான கூறுகள் எதுவும் இல்லாத வரை சம்பவ இடத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப் பட்டதாகவும், நேற்று மாலை 5.48 மணிக்கு அந்நடவடிக்கை முடிவடைந்தது என்றும் ஃபௌசி கூறினார்.

– பெர்னாமா


Pengarang :