NATIONAL

ஆகஸ்டு 17 இல் நெங்கிரி தொகுதி இடைத் தேர்தல்- 3ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல்

புத்ராஜெயா, ஜூன் 28- கிளந்தான் மாநிலத்தின் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஆகஸ்டு 3ஆம் தேதியும் தொடக்கக் கட்ட வாக்களிப்பு 13ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருண் கூறினார்.

இத்தொகுதியில் 20,259 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கு 16 லட்சம் வெள்ளி செலவாகும் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள எஸ்.பி.ஆர். தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நெங்கிரி இடைத் தேர்தல் தொடர்பான முக்கியத் தேதிகளை முடிவு செய்வதற்கான கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நெங்கிரி தொகுதி ஜூன் 19ஆம் தேதி தொடங்கி காலியாவதாகக் கிளந்தான் சட்டமன்ற சபாநாயகர் டத்தோ முகமது அமார் நிக் அப்துல்லா முன்னதாக அறிவித்திருந்தார்.

கிளந்தான் மாநில அமைப்புச் சட்டத்தின் ஷரத்து (3) அதிகாரம் 31ஏ படி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது அஜிசியிடமிருந்து கடந்த 13ஆம் தேதி எழுத்துப்பூர்வக் கடிதத்தை மாநில சட்டமன்றம் பெற்றத்தைத் தொடர்ந்து அத்தொகுதி எதிர்பாராத வகையில் காலியாவதாகச் சபாநாயகர் அறிவித்தார்.


Pengarang :