NATIONAL

சீனாவுக்கு டுரியான் ஏற்றுமதி, ஏழ்மை ஒழிப்பு குறித்து மக்களவையில் இன்று விவாதம்

கோலாலம்பூர், ஜூலை 1- சீனாவுக்கு டுரியான் ஏற்றுமதி, பரம ஏழ்மையை
ஒழிப்பதற்கான இலக்கு மற்றும் கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் ஆலை
நிர்மாணிப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக்
கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அவையில் இன்று நடைபெறவுள்ள வாய்மொழி கேள்வி-பதில் அங்கத்தில்
இக்கேள்விகள் இடம் பெறவுள்ளதாக நாடாளுமன்ற அகப்பக்கத்தில்
வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவுக்கு டுரியான் ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறைகளை
விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் ஏற்றுமதி எப்போது
அமலுக்கு வரும் என்பது குறித்தும் ரவுப் தொகுதி பக்கத்தான் ஹராப்பான்
உறுப்பினர் சோவ் யூ ஹூய் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத
அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.

டுரியான் ஏற்றுமதி செய்வதில் அமைச்சு எதிர்நோக்கும் பிரச்சனைகள்
மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்தும் அவர்
அமைச்சரிடம் விளக்கம் கோருவார்.

பரம ஏழ்மையை முற்றாக ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் இலக்கு மற்றும்
அதன் தொடர்பான செயல் திட்டங்கள் குறித்து பாசீர் மாஸ் தொகுதி
பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் அகமது பாட்லி ஷாரி பொருளாதார
அமைச்சரிடம் வினா தொடுப்பார்.

பினாங்கு உள்பட நாட்டின் 18 இடங்களில் கழிவுகளிலிருந்து எரிசக்தி
தயாரிக்கும் ஆலையை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்பில் வீடமைப்பு
மற்றும் ஊராட்சித் துறை அமைச்சரிடம் பாயான் பாரு தொகுதி
ஹராப்பான் உறுப்பினர் சிம் ஸீ சின் கேள்வியை முன்வைப்பார்.

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விபத்துகளின்
எண்ணிக்கை மற்றும் வேலையிடப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினர் உள்ளிட்ட முதலாளிகளுக்கு ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து மனித வள அமைச்சரிடம் பெண்டாங் பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ அவாங் ஹஷிம் வினா தொடுப்பார்.


Pengarang :