NATIONAL

கே.டி.என்.கே. பங்களிப்பு அதிகரிப்பு- சிலாங்கூர் அரசு நிர்வாகம் மீதான வர்த்தக சமூகத்தின் நம்பிக்கையை காட்டுகிறது

ஷா ஆலம், ஜூன் 3- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
(கே.டி.என்.கே.) சிலாங்கூர் மாநிலப் பங்களிப்பின் அதிகரிப்பு, கூட்டரசு
அரசாங்கத்துடன் இசைந்து போகும் மாநில அரசு நிர்வாகத்தின் மீது
வர்த்தக சமூகமும் மக்களும் கொண்டுள்ள நம்பிக்கையை
புலப்படுத்துவதாக உள்ளது.

எனினும், அந்த சாதனையை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனக்
கூறிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நீடித்த பொருளாதார
வளர்ச்சியை அடைவதற்கான உந்து சக்தியாக இந்த அடைவு நிலையை
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மாவட்ட மற்றும் ஊராட்சி மன்ற நிலையில் பொருளாதார அடைவு
நிலையை உயர்த்துவது மற்றும் பருவநிலை மாற்றப் பிரச்சனைக்கு நீடித்த
தீர்வைக் காண்பது ஆகியவையும் இதில் அடங்கும் என அவர்
குறிப்பிட்டார்.

இவை தவிர, சிலாங்கூர் வளர்ச்சியடைந்த மாநிலமாக மட்டுமின்றி
வசிப்பதற்கு உகந்த இடமாகவும் திகழ்வதற்கு ஏதுவாக தரமான அடிப்படை
வசதிகளும் முதிர்ந்த நகருக்கு இளமைத் தோற்றத்தை ஏற்படுத்தும்
முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

தென்கிழக்காசியாவில் சிலாங்கூர் மாநிலம்தான் முதலீட்டுக்கான
முதன்மை தேர்வு என்ற நம்பிக்கையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்த இந்த அணுகுமுறை பெரிதும்
துணை புரியும் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
குறிப்பிட்டார்.

இந்த அடைவு நிலையை பதிவு செய்ததற்காக மாநில அரசு செயலாளர்,
ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், அரசு ஊழியர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும்
தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின்
பங்களிப்பு 25.9 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக மலேசியப் புள்ளிவிபரத்
துறை கூறியிருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 25.5
விழுக்காடாக இருந்ததாக அது குறிப்பிட்டிருந்தது.


Pengarang :