ANTARABANGSA

தென் காஸா மீது இஸ்ரேல் குண்டுவீச்சுத் தாக்குதல்- ஆயிரக்கணக்கானோர் தப்பியோட்டம்

காஸா, ஜூலை 3 – காஸாவின் தென் பகுதி மீது இஸ்ரேலியப் படைகள்
நேற்று குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டன. கடந்த ஒன்பது
மாதங்களாக நீடித்து வரும் போரின் இறுதிக்கட்ட நகர்வின் ஒரு பகுதி
எனக் கருதப்படும் இத்தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள்
வீடுகளை விட்டு தப்பியோடினர்.

இந்த தாக்குதல்களில் எட்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும்
பலர் காயமுற்றதாக மருத்துவ வட்டாரங்கள் கூறின. இச்சம்பவத்திற்கு
முதல் நாள் நிகழ்ந்த தாக்குதலில் தங்கள் வீரர்கள் இருவர்
கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் காஸாவை தங்கள் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் இஸ்லாமிய தரப்பான ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான
தீவிரப் போரை தாங்கள் முடிவுக்கு கொண்டு வந்து இலக்கிடப்பட்ட
தாக்குதல்கள் மீது கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலியத் தலைவர்கள்
கூறியுள்ளனர்.

காஸாவின் வட பகுதியிலுள்ள ஜெய்தோன் வட்டாரத்தின் அடர்த்தியான
குடியிருப்பு பகுதியின் சாலைகளில் நேற்று பின்னேரம் இஸ்ரேலிய
டாங்குகள் நடத்திய தாக்குதலில 17 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக
மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில வாரங்களுக்கு முன்னர் கான் யூனிஸ் பகுதியிலுள்ள நகர் மற்றும்
கிராமங்களிலிருந்து வெளியேறிய இஸ்ரேலிய படைகள் கடந்த
திங்கள்கிழமை மீண்டும் நுழைந்த வேளையில் வீட்டிலிருந்து
வெளியேறும்படி அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு இராணுவ வீரர்கள்
உத்தரவிட்டனர்.

இஸ்ரேலிய இராணுவத்தின் அந்த உத்தரவை புறக்கணித்து அங்கேயே தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோர் இருள் சூழ்ந்த வேளையில் இஸ்ரேலிய டாங்குகளும் போர் விமானங்களும் தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து புகலிடம் தேடி ஓட்டம் பிடித்தனர்.


Pengarang :