NATIONAL

சிலாங்கூர் எஃப்.சி. விளையாட்டாளர் வீட்டில் கொள்ளை- இரு சந்தேக நபர்கள் கைது

ஷா ஆலம், ஜூலை 3 –  சிலாங்கூர் எஃப்சி கால்பந்து குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர்  அகமது குஸைமி பை வீட்டில்  அண்மையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம்
தொடர்பில்  இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

28 மற்றும் 33 வயதுடைய அந்த சந்தேக நபர்களைப் போலீசார் பின்தொடர்ந்து சென்றபோது  திரங்கானு மாநிலத்தின்  மாராங்கில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய பின்னர்  காவல்துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஃப்ரீ மலேசியா டுடே இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும்,  கால்பந்து வீரர்கள் சம்பந்தப்பட்ட பல சம்பவங்களுக்கும்  இந்த சந்தேகப் பேர்வழிகளுக்கும்  எந்த தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் கூறினார்.

அவர்களுக்கு வேறு எந்த சம்பவங்களிலும்  தொடர்பில்லை. மேலும் வீடு இலக்கு வைக்கப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூன் 26 ஆம் தேதி தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர்களின்  தடுப்புக்காவல்  ஜூன் 30 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. எனினும், அந்த தடுப்புக் காவல் அனுமதி இன்று வரை நீட்டிக்கப்பட்டது என்றார் அவர்.

கடந்த மே 22ஆம் தேதி அகமது  குஸைமியின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் அவர் யமஹா  மோட்டார் சைக்கிள் உட்பட 15,000 வெள்ளி மதிப்புமிக்க பொருட்களை இழந்தார்.


Pengarang :