NATIONAL

வீட்டுக் காவல் அனுமதி கோரி நஜிப் செய்த மனு நிராகரிப்பு- உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், ஜூலை 3 – தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின்
எஞ்சியக் காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிப்பதற்கு முன்னாள் பிரதமர்
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் செய்து கொண்ட மனுவை நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.

மாட்சிமை தங்கிய 16வது பேரரசரின் பின்சேர்ப்பு உத்தரவு தொடர்பில்
அரசாங்கத்திற்கு எதிராக நஜிப் செய்து கொண்ட சீராய்வு மனுவை
இங்குள்ள உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

மாமன்னரின் பின்சேர்ப்பு உத்தரவு இருந்ததாக கூறும் அனைத்து
அப்பிடவிட்டுகளும் வெறும் ஊகங்களே என்று நீதிபதி டத்தோ அமார்ஜிட்
சிங் தனது தீர்ப்பில் கூறினார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தாங்கள் மேல் முறையீடு
செய்யவுள்ளதாக நஜிப்பின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா கூறினார்.

எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் வழக்கில் நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட 12
ஆண்டுச் சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகவும் 21 கோடி வெள்ளி
அபராதம் 5 கோடி வெள்ளியாகவும் குறைக்கப்படுவதாகக் கூட்டரசு பிரதேச
மன்னிப்பு வாரியம் இவ்வாண்டு தொடக்கத்தில் கூறியிருந்தது. நஜிப்
இப்போது காஜாங் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மாமன்னர் பதவிக்கான
தவணைக் காலம் முடிவடைவதற்கு ஒரு தினத்திற்கு முன்னர் அதாவது
ஜனவரி 29ஆம் தேதி கூடிய மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் பின்சேர்ப்பு
உத்தரவைப் பிறப்பித்ததாகக் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தாக்கல் செய்த
மனுவில் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பின்சேர்ப்பு உத்தரவை அரசாங்கம் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி
அறிவிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அந்த உத்தரவு பின்பற்றப்படாததற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

அப்படியொரு அரச உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதனை
அமல்படுத்தும்படி அரசாங்கத்தை நீதிமன்றம் நிர்பந்திக்க வேண்டும்
என்பதோடு தமக்கு வீட்டுக் காவல் அனுமதியும் வழங்கப்பட வேண்டும்
என அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.


Pengarang :