NATIONAL

மாணவர்கள் நலன் காக்க மாநில அரசின் ஏற்பாட்டில் செயலகம் உருவாக்கம்

ஷா ஆலம், ஜூலை 3 – பல்கலைக்கழக மாணவர்களின் நலன் காக்கவும்
வேலை வாய்ப்புகளை உறுதி செய்யவும் சிலாங்கூர் மாணவர்
மேம்பாட்டுச் செயலகத்தை மாநில அரசு அமைத்துள்ளது.

இந்த செயலகத்தில் அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பல்வேறு
பின்னணிகளைக் கொண்ட வியூக அமைப்பினரும் இடம் பெற்றுள்ளனர்
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த செயலகத்தின் கீழ் மாணவர் நலன், அறிவு கலாசார தொடர்ச்சி,
நிர்வாகம், பட்டதாரி சந்தை வாய்ப்பு ஆகியவற்றோடு மாணவர்
நலனுக்கான மாநில அரசின் குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலத்
திட்டங்களும் விரிவாகத் திட்டமிடப்படும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூரிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஏற்கனவே
தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்த
செயலகம் உருவாக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

முன்பு ஜொலாஜா மஹாசிஸ்வா கித்தா சிலாங்கூர் என அழைக்கப்பட்ட
ஜெராயாவாரா சிஸ்வா கித்தா சிலாங்கூர் திட்டமும் இதில் அடங்கும்
என்றார் அவர்.

இந்த திட்டம் பினாங்கு மற்றும் சபாவில் இவ்வாண்டு நடத்தப்பட்டதாக
கூறிய அவர், அதனை நாடு முழுவதும் உள்ள சிலாங்கூர் மாணவர்களுக்கு
விரிவுபடுத்தவும் தாங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில மாணவர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட மற்றொரு
திட்டம் சிலாங்கூர் மத்திய கிழக்கு மாணவர் மாநாடாகும். இது தனது
தலைமைத்துவத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்று
அவர் சொன்னார்.

இந்த மாநாட்டின் ஆகக்கடைசி நிகழ்வு கடந்தாண்டு அக்டோபர் மாதம்
ஜோர்டான் நாட்டின் அம்மானில் நடைபெற்றது என அவர் குறிப்பிட்டார்.
இந்த செயலகத்தை தொடக்கியதன் மூலம் மாணவர் மேம்பாட்டு
நிகழ்ச்சிகளை ஒரு முறை மட்டும் அல்லாமல் தொடர்ந்து நடத்த
முடியும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :