NATIONAL

5,125 மலேசிய மாணவர்களுக்கு திவேட் பயிற்சி வாய்ப்பு- சீனா வழங்குகிறது

ஷா ஆலம், ஜூலை 3 – திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும்
தொழில்திறன் கல்வியை மேற்கொள்ள மலேசியாவைச் சேர்ந்த 5,125
மாணவர்களுக்கு 114 சீன கல்விக்கூடங்கள் இடங்களை வழங்குகின்றன.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி
அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் பலனாக இந்த
வாய்ப்பு கிட்டியதாக துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முகமது
அலாமின் கூறினார்.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி மேலும் அதிகமான போதனையாளர்கள்
மற்றும் மாணவர்களை பயிற்சிக்காக அந்நாட்டிற்கு அனுப்ப அரசாங்கம்
திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

தொழில்திறன் மற்றும் நிபுணத்துவத் துறை சார்ந்த கல்வி மற்றும்
பயற்சியில் மிகப்பெரிய ஸ்தாபனமாக விளங்கும் ஹாங்காங்
தொழில்திறன் பயிற்சி மன்றமும் அவற்றில் ஒன்றாகும் என்று அவர்
தெரிவித்தார்.

மக்களவையில் இன்று துணைப் பிரதமர் சீனாவுக்கு மேற்கொண்ட
பயணத்தின் மூலம் கிட்டிய பலன்கள் குறித்து செராஸ் உறுப்பினர்
தெரேசா கோக் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
கூறினார்.

மலேசியா-சீனா உறவுகளின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி துணைப்
பிரதமர் மேற்கொண்ட அந்த பயணத்தின் போது உலக ஹலால்
தொழில்துறையின் அபரிமித வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று
அவர் குறிப்பிட்டார்.

சீனப் பிரதமர் லீ கியாங்குடன் துணைப் பிரதமர் நடத்திய சந்திப்பின்
போது ஹலால் தொழில்துறையில் மலேசியாவின் முன்னெடுப்புகளை
இரு தலைவர்களும் வரவேற்றதோடு சான்றிதழ், சேவை மற்றும் ஹலால்

பொருள் தயாரிப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இணக்கம்
தெரிவித்தனர் என்றார் அவர்.

மேலும், இரு நாடுகளும் சம்பந்தப்பட்ட வட்டார மற்றும் அனைத்துலக
விவகாரங்கள் குறித்தும் உயர் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,
இலக்கவியல் பொருளாதாரம், செமிகண்டக்டர் துறைகள் குறித்தும் இரு
தலைவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர் என்று அவர்
சொன்னார்.


Pengarang :