NATIONAL

5 மாதங்களில்  2,225 இந்திய தொழில்முனைவோருக்கு வெ.32.55 மில்லியன்  கடனுதவி! டத்தோ ரமணன் சாதனை

கோலாலம்பூர், ஜூலை 4 – வணிகத் துறையில் அதிகமான இந்தியர்களை ஈடுபடச் செய்வதிலும், அவர்களின் வியாபாரத்தை அடுத்த நிலைக்கு உயர்த்துவதிலும் தீவிர முனைப்புச் செலுத்தி வந்த தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்,  ஐந்தே மாதக் காலத்தில்  2,225 தொழில் முனைவோருக்கு 32.55 மில்லியன் ரிங்கிட் கடனுதவியை வழங்கி அதிரடி நிகழ்த்தியுள்ளார்.

தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுத் துறை அமைச்சின் கண்காணிப்பில் உள்ள தெக்குன், அமானா இக்தியார் (ஏ.ஐ.எம்), பேங்க் ராக்யாட் ஆகிய நிதியகங்கள் வழி, இந்திய தொழில்முனைவோர்களுக்குப் பிரத்தியேக வியாபாரக் கடனுதவிகளை ஒதுக்கீடு செய்வதில் டத்தோ ரமணன் வரலாற்றுப் புதுமை செய்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

‘தெக்குன் ஸ்புமி’ நிதியகப் பிரிவின் கீழ், புதிதாய் ‘தெக்குன் ஸ்புமி கோஸ் பிக்’ எனும் இன்னொரு வியாபாரக் கடனுதவி களத்தை உருவாக்கி, அதன் கீழ் 30 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அவர் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து, பெண் தொழில்முனைவோர்களுக்கான அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) நிதியகத்தின் கீழ், இந்தியப் பெண்களுக்காகப் “பெண்” (P.E.N.N) எனும் புதிய வியாபாரக் கடனுதவியை அறிமுகம் செய்து, கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதியையும் அவர் அறிவித்திருந்தார்.

அதோடு நில்லாமல், பேங்க் ராக்யாட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய தொழில்முனைவோர்களுக்காகப் ‘பிரிஃப்-ஐ’ (BRIEFF-I) எனும் புதிய கடனுதவி திட்டத்தை அறிமுகம் செய்து, பிரத்தியேகமாக 50 மில்லியன் ரிங்கிட் நிதியையும் அவர் ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந்நிலையில், ஆண்டு தொடக்கத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பிரச்சாரங்கள் – விளக்கக்கூட்டங்கள் வழி, கடந்த 31 மே 2024 வரை, தெக்குன் ஸ்புமி நிதிகயகத்தின் வழி  822 இந்தியத் தொழில்முனைவோர்களுக்கு 17.355 மில்லியன் ரிங்கிட் பகிரப்பட்டுள்ளதாகவும், ‘தெக்குன் ஸ்புமி கோஸ் பிக்’  எனும் புதிய கடனுதவித் திட்டத்தின் கீழ் 13 பேருக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

நேற்று முன்தினம் கூடிய மக்களவை கூட்டத் தொடரில், இந்திய தொழில்முனைவோர்களுக்கான மொத்த ஒதுக்கீடு குறித்தும், ஸ்புமி – பெண் திட்டங்கள் வழி பலனடைந்தோர் விவரம் குறித்தும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்தார்.

தெக்குன் நிதியகத்தின் ‘ஸ்புமி’ பிரிவின் வழி, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 31 மே 2024 வரை 29,136 இந்திய தொழில்முனைவோர்களுக்கு 457.7 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

புதிதாய் அறிமுகம் கண்ட ஏ.ஐ.எம் – பெண் திட்டத்தின் வழி, இதுவரை 1,347 இந்தியப் பெண் தொழில்முனைவோர்களுக்கு 10.85 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், பேங்க் ராக்யாட் பிரிஃப்-ஐ திட்டத்தின் கீழ் 43 பேருக்கு 3.8 மில்லியன் கடனுதவி அங்கீகரிக்கபட்டுள்ளதாகவும் டத்தோ ரமணன் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரிஃப்-ஐ கடனுதவித் திட்டத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் இதுவரை 140 இந்திய தொழில்முனைவோர்கள் கடனுதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

தெக்குன் ஸ்புமி, தெக்குன் ஸ்புமி கோஸ் பிக், ஏ.ஐ.எம். – பெண், பேங்க் ராக்யாட் பிரிஃப்-ஐ ஆகிய வியாபாரக் கடனுதவித் திட்டங்கள் வழி, இந்தியத் தொழில்முனைவோர்களை முன்னேற்றும் கடப்பாட்டில் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை அமைச்சு முழு அக்கறையும் ஈடுபாடும்  கொண்டிருப்பதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.


Pengarang :