NATIONAL

தங்க வியாபாரத்தில் கபடத்தனம்- 361,000 வெள்ளியுடன் தப்பிய நான்கு அந்நிய நாட்டினர் கைது

ஷா ஆலம், ஜூலை 4- தங்க வியாபாரம் செய்வது போல் கபட நாடகமாடி
உள்நாட்டு ஆடவர் ஒருவரிடமிருந்து 369,966 வெள்ளியைப் பறித்துக்
கொண்டு தப்பிய பெண் ஒருவர் உள்ளிட்ட நான்கு அந்நிய நாட்டு
ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபத்து நான்கு முதல் 37 வயது வரையிலான அந்த நான்கு சந்தேகப்
பேர்வழிகளையும் அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின்
குற்றப்புலனாய்வுத் துறையினர் பெர்சியாரான் மற்றும் டி.ஆர்.எக்ஸ்.
மற்றும் ஜாலான் துன் ரசாக்கில் இம்மாதம் 28 மற்றும் 29ஆம் தேதிகளில்
கைது செய்ததாக சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 28,300 வெள்ளி
ரொக்கம், இரு கார்கள், ஆறு கைப்பேசிகள், மடிக்கணினி, ஆறு ஏ.டி.எம்.
கார்டுகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர்
சொன்னார்.

கடந்த மாதம் 24ஆம் தேதி தங்க கொள்முதல் தொடர்பில் ஆடவர் ஒருவரை பாதிக்கப்பட்ட நபர் சந்திப்பதற்கான ஏற்பாட்டை சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர் செய்ததாக அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட நபரை சந்தேகப் பேர்வழிகள் காரில் ஏற்றி
அம்பாங், ஜாலான் சுலைமான் 1 எனும் இடத்திற்கு கொண்டுச் சென்றனர்.

தங்கம் வாங்குவதற்காக அந்நபர் கொடுத்த பணத்தை எண்ணுவதை
கவனிப்பதற்கு ஏதுவாக அவரை காரின் பின் இருக்கையில் அவர்கள்
அமரச் செய்துள்ளனர்.

அக்கும்பல் திடீரென காரின் முன் இருக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு மற்றொரு காரில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தங்கத்தை விற்பதாக வாடிக்கையாளர்களிடம் ஆசை வார்த்தை காட்டி
பரிவர்த்தனை நடைபெறும் போது பணத்துடன் தப்பியோடுவது அந்த
கும்பலின் பாணியாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 379வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், கைது
செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.


Pengarang :