NATIONAL

மாற்றியமைக்கப்பட்ட தோம்புகளைப் பயன்படுத்தி பெட்ரோல் கடத்தும் கும்பல் முறியடிப்பு

கோத்தா பாரு, ஜூலை 4 – மலேசியா-தாய்லாந்து எல்லையில்
மாற்றியமைக்கப்பட்ட டிரம் தோம்புகளை காரின் உபரி டாங்கியாகப்
பயன்படுத்தி ரோன்95 ரக பெட்ரோலைக் கடத்தும் கும்பலின்
நடவடிக்கையை அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

தும்பாட், பெங்காலான் குபோர் மூன்றாவது பிராந்திய கடல் போலீஸ் குழு
இரு புரோட்டோன் வீரா ஏரோபேக் கார்களில் நடத்திய சோதனையில்
இந்த கடத்தல் தந்திரம் வெளிச்சத்திற்கு வந்தது.

அக்கார்களில் கூடுதலாக தலா 200 லிட்டர் பெட்ரோல் இருப்பது
கண்டறியப்பட்டது. இந்த பெட்ரோல் எல்லையிலிருந்து 25 கிலோ மீட்டர்
சுற்றுவட்டாரத்திலுள்ள பெட்ரோல் நிலையங்களில் வாங்கப்பட்டிருக்கலாம்
என சந்தேகிக்கப்படுவதாக வட்டாரங்கள் கூறின.

அதிகாரிகளின் வருகையை அறிந்ததும் பெட்ரோல் கடத்தல்காரர்கள்
தங்கள் கார்களை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடினர்.

கார்களில் பொருத்தப்பட்ட உபரி டாங்கிகளைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட
இந்த 400 லிட்டர் பெட்ரோலும் பின்னர் பிளாஸ்டி டிரம்களில் நிரப்பப்பட்டு
படகுகள் மூலம் அண்டை நாட்டிற்குக் கடத்தப்படவிருந்தன என்று அந்த
வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கைப்பற்றப்பட்ட அவ்விரு கார்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் அவை
பெட்ரோலை நிரப்புவதற்கான இரு மூடிகளைக் கொண்டிருப்பது
கண்டறியப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 14 டீசல் கடத்தல் சம்பவங்கள்
முறியடிக்கப்பட்டு 97,678 வெள்ளி மதிப்புள்ள 45,251 லிட்டர் எரிபொருள்
பறிமுதல் செய்யப்பட்டதாகப் பெங்காலான் குபோர் 3வது பிராந்திய கடல்
போலீஸ் நடவடிக்கை அதிகாரி ஏஎஸ்பி அக்கில் அப்துல் ரவுஃப் கூறினார்.


Pengarang :