NATIONAL

இலக்கு மானியம் அமல்படுத்தப்பட்டது முதல் கடத்தல் டீசல் பறிமுதல் 87 விழுக்காடு குறைந்தது

புத்ராஜெயா, ஜூலை 4- டீசல் இலக்கு மானியத் திட்டம் கடந்த மாதம்
10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது முதல் அந்த எரிபொருள் சம்பந்தப்பட்ட
பறிமுதல் நடவடிக்கைகள் 87 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ
அர்மிஸான் முகமது அலி கூறினார்.

அந்த டீசல் இலக்கு மானியத் திட்டம் அமலாக்கத்திற்கு 20 நாட்கள்
முன்பும் 20 நாட்கள் பின்பும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விபரம்
தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

கடந்த மே மாதம் 20 முதல் ஜூன் 9 வரை மேற்கொள்ளப்பட்ட 65
சோதனை நடவடிக்கைகள் வாயிலாக 520,803 லிட்டர் டீசல் பறிமுதல்
செய்யப்பட்டது. அதே சமயம் ஜூன் 10 முதல் 30 வரையிலான இருபது
நாட்களில் 68,557 லிட்டர் டீசலை உட்படுத்தி 14 சம்பவங்கள் மட்டுமே
பதிவு செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

டீசல் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும்
அக்காலக்கட்டத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது. இலக்கு மானிய திட்ட
அமலாக்கத்திற்கு முன் 40 பேராக இருந்த அந்த எண்ணிக்கை தற்போது
ஒருவராகக் குறைந்துள்ளது என்றார் அவர்.

டீசல் கடத்தல் நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்துள்ளதை இரு
வெவ்வேறு காலக்கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பீடு
புலப்படுத்துகிறது எனற அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி தொடங்கி தீபகற்ப மலேசியாவிலுள்ள
அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் டீசல் விலையை லிட்டர்
ஒன்றுக்கு வெ.3.35ஆக அரசாங்கம் நிர்ணயித்தது.

அதே சமயம் சபா, சரவா மற்றும் லபுவானில் அந்த எரிபொருளின் விலை
லிட்டருக்கு வெ.2.15ஆக தொடர்ந்து நிலை நிறுத்தப்படுகிறது.

எனினும், டீசல் கடத்தல் குறைந்துள்ள அதே வேளையில் ரோன்95
பெட்ரோல் கடத்தல் நடவடிக்கை அக்காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளதாக
அர்மிஸாம் சொன்னார்.

கடந்த மே 20 முதல் ஜூன் 9 வரை மேற்கொள்ளப்பட்ட 37 சோதனை
நடவடிக்கைகளில் 17,064 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது
என்றார் அவர்.


Pengarang :