NATIONAL

சிலாங்கூர் ரயில் பாதை சிறிய நகரங்களின் பொருளாதார திறனை மேம்படுத்தும்

ஷா ஆலம், ஜூலை 4: சிலாங்கூர் ரயில் பாதையானது சிலாங்கூரின் வடக்கில் உள்ள பல சிறிய நகரங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வல்லது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் ரயில் பாதை காப்பார், ஜெராம், கோலா சிலாங்கூர், சிகிஞ்சான் மற்றும் சபாக் பெர்ணம் ஆகியவற்றை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் பேராக் எல்லைப் பகுதிக்கும் கூட பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

“இந்த நடவடிக்கை சிலாங்கூரை தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையுடன் இணைக்கும், கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்புத் திட்டத்தை (ECRL) நிறைவு செய்யும்” என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.

கிள்ளான் முதல் கோலா சிலாங்கூர், தஞ்சோங் காராங் மற்றும் சபாக் பெர்ணம் வரையிலான சிலாங்கூர் ரயில் பாதை இருப்பது நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சியை சமநிலைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று அமிருடின் மேலும் கூறினார்.

பேருந்து சேவைகள் மூலம் இறுதி எல்லை வரையான இணைப்பை வலுப்படுத்துவதுடன், இலகு ரயில் போக்குவரத்து (LRT) அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளுக்கும் இந்த திட்டம் துணையாக விளங்கும் என்றார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2024 இல், மாநில அரசு RM3 மில்லியன் ஒதுக்கீட்டின் மூலம் மாநிலத்தின் மேற்குக் கடற்கரையில் சிலாங்கூர் ரயில் பாதையின் சாத்தியக்கூறு பற்றிய ஆய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :