NATIONAL

சாப்டா முன்னெடுப்பின் கீழ் மூன்று திட்டங்கள் பூர்த்தி – சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், ஜூலை 5 – சாப்டா எனப்படும் சபாக் பெர்ணம் மேம்பாட்டுப்
பகுதி முன்னெடுப்பின் கீழ் மூன்று திட்டங்கள் பூர்த்தியடைந்து செயல்படத்
தொடங்கியுள்ளதாகக் கிராம புறநகர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.

சுங்கை பாஞ்சாங் மின்மினிப் பூச்சு சரணாயலயம், பான் கெனால் சூழியல்
சுற்றுலா திட்டம் மற்றும் டபள்யு.சி.இ. எனப்படும் மேற்கு கடற்கரை
நெடுஞ்சாலையின் சபாக் பெர்ணம் பகுதி ஆகியவையே பூர்த்தியடைந்த
அந்த மூன்று திட்டங்களாகும் என்று அவர் சொன்னார்.

சாப்டாவின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் யாவும் நீண்ட கால
அடிப்படையிலானவை என்பதோடு அவை பூர்த்தியடைய ஐந்து ஆண்டுகள்
வரை பிடிக்கும். இருப்பினும், திட்ட மேம்பாட்டைப் பொறுத்த வரை, 18
திட்டங்களில் மூன்று முழுமையாக முற்றுப் பெற்று செயல்படத்
தொடங்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

சபாக் பெர்ணம் மற்றும் பாகான் டத்தோவை இணைக்கும் சுங்கை ஆயர்
தாவார்-ஊத்தாங் மெலிந்தாங் பால நிர்மாணிப்பு வரும் 2026 ஜூன் மாதம்
பூர்த்தியடையும். எஞ்சிய திட்டங்கள் திட்டமிடல், வடிவமைப்பு, கருத்து
உருவாக்கம் ஆகிய கட்டங்களில் உள்ளன என்றார் அவர்.

சாப்டா திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நிலங்கள் வட்டார மக்களுக்குச்
சொந்தமானவை அல்ல என்று இன்று மாநில சட்டமன்றத்தில்
உரையாற்றுகையில் சுங்கை ஆயர் தாவார் உறுப்பினருமான அவர்
இதனைத் தெரிவித்தார்.

தற்போதைக்கு, சாப்டா திட்டத்திற்காக குறிப்பாகப் பால நிர்மாணிப்புக்குப்
பயன்படுத்தப்படும் நிலங்கள் அரசாங்கத்திற்கு சொந்தமானவையே
என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

சாப்டாவின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் நிலங்கள் தொடர்பான
பிரச்சனைகளை ஒருமுகப்படுத்துவது மற்றும் தீர்வு காண்பதில்
முக்கியத்துவம் அளிக்கப்படும். இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட
நிலங்கள் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :