NATIONAL

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 45 பேரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்

கோத்தா கினபாலு, ஜூலை 9- திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக ஆற்றின் மறு கரையில் சிக்கிக் கொண்ட ஏழு சிறுவர்கள் உள்பட 45 பேர் தெய்வாதீனமாக உயிர்த் தப்பினர். கோத்தா மருடு, ஜாலான் தண்டேக் கம்போங் லொங்கோப்பில் உள்ள குளம் ஒன்றில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.11 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததை தொடர்ந்து கோத்தா மருடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழு ஒன்று 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தாக சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அறை அறிக்கை ஒன்றில் கூறியது.

அங்கு ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் காரணமாக பாலம் நீரில் அடித்துச் செல்லப் பட்டதைத் தொடர்ந்து 23 ஆண்கள், 15 பெண்கள் மற்று ஏழு சிறுவர்கள் உட்பட 45 பேரடங்கிய அந்த குழுவினர் ஆற்றின்  கரையில் சிக்கிக் கொண்டுள்ளதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர்.

தீயணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் ஏணியைப் பயன்படுத்தி அவர்களை அனைவரையும் பாதுகாப்பாக மறு கரைக்கு கொண்டு வந்தனர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.


Pengarang :