ANTARABANGSA

அதிபர் ஜோ பைடனுக்கு பார்க்கின்சன் நோய் சிகிச்சையா? வெள்ளை மாளிகை மறுப்பு

வாஷிங்டன், ஜூலை 9- பார்க்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோய்க்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

அந்நோய்க்கு சிகிச்சையளிப்பதில் பிரசித்தி பெற்ற நரம்பியல் நிபுணர் ஒருவர் அந்த நிர்வாக மாளிகைக்கு அண்மைய மாதங்களில் எட்டு முறை வருகை புரிந்ததை வருகையாளர் பதிவேடு காட்டியதைத் தொடர்ந்து அதிபரின் உடல் நிலை தொடர்பான ஆருடம் வலுத்துள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் டாக்டர் கெவின் கெனர்ட் என்ற அந்த மருத்துவ நிபுணர் எட்டு முறை வருகை புரிந்துள்ளது வெள்ளை மாளிகையின் அகப்பக்கம் வாயிலாக பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட வருகையாளர் விபரங்கள்  வழி தெரிய வந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் டாக்டர் கெனார்ட் வருகை புரிந்தாரா என்பது தெரியவில்லை என்று அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.

டாக்டர் கெனார்ட் ஆரம்பக் கட்ட பார்க்கின்சன் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியை மேற்கொண்டு வந்ததாக டேக்ஸிமிட் மருத்துவ நிபுணத்துவ ஒருங்கமைப்பு தளத்தில் உள்ள மற்றொரு பொது சுயவிபரக் குறிப்பு கூறுகிறது.

அமெரிக்க இராணுவத்தில் கர்னல் பதவி வகித்த  கெனார்ட, கடந்த 2008இல் பதவி விலகியதிலிருந்து அமெரிக்க அதிபர்களுக்கு சிகிச்சை வழங்கும் வால்டர் ரீட மருத்துவ மையத்தில் பணியாற்றி வருகிறார்.

அதிபர் ஜோ பைடன் பார்க்கின்சன் நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதை வெள்ளை மாளிகையின் பேச்சாளரான கெரின் ஜீன் பியெரி மறுத்துள்ளார். எனினும், மருத்துவரின் வருகை தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். டாக்டர் கெனார்ட்டின் வெள்ளை மாளிகை வருகையைக் கூட உறுதிப்படுத்த அவர் மறுத்து விட்டார்.

நான் எதையும் உறுதிப்படுத்த இயலாது. அவர்களின் தனிப்பட்ட விவகாரங்களை நான் பாதுகாத்தாக வேண்டும் என அவர் சொன்னார்.


Pengarang :