SELANGOR

விவேக வாடகைத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1,287 வீடுகள் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூலை 9- குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் வாடகைக்கு வீடுகளைப் பெறுவதற்கு ஏதுவாக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டங்களில் மொத்தம் 1,287 வீடுகள் ‘ஸ்கிம் ஸ்மார்ட் சேவா‘ எனப்படும் விவேக வாடகைத் திட்டத்திற்கு ஒதுக்கப் பட்டன.

மொத்தம் 24 கோடி வெள்ளி மதிப்பிலான 32 வீடமைப்புத் திட்டங்களை இந்த விவேக வாடகைத் திட்டம் உள்ளடக்கி உள்ளதாகக் கூறிய வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா, தாங்கள் வாடகைக்கு இருந்த காலத்தில் செலுத்திய வாடகைத் தொகையில் 30 விழுக்காட்டை திரும்பப் பெறுவதற்குரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.

வீடுகளை வாங்குவதற்கு வங்கியில் கடன் கிடைக்காத தரப்பினருக்கு உதவும் நோக்கில் மாநில அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தியது. சந்தையை விட குறைந்த விலையில் வீட்டை வாடகைக்கு பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்த திட்டம் வழங்குகிறது என்று அவர் சொன்னார்.

அவர்கள் இரண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை அந்த வீடுகளில் வாடகைக்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்படுகிறது. தவணைக் காலம் முடிந்ததும் இதுவரை செலுத்தி வாடகையில்  30 விழுக்காடு அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.

புதிதாக மணம் புரிந்த தம்பதியருக்கு உதவும் நோக்கில் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் மேலும் மூவாயிரம் விவேக வாடகை வீடுகளை நிர்மாணிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக பொர்ஹான் முன்னதாக கூறியிருந்தார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினர் குறிப்பிட்ட காலத்திற்குள் சொந்த வீட்டைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :