SELANGOR

மகளிர் ஆக்கத்திறன் மேம்பாட்டு மையத்தின் வழி 225 திட்டங்கள் அமல்- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், ஜூலை 9- இவ்வாண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை மகளிர் ஆக்கத்திறன் மேம்பாட்டு மையத்தின் (பி.டபள்யு.பி.) வாயிலாக 225 மகளிர் திறன் வளர்ப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

திறன் மற்றும் ஆளுமை வளர்ப்பை உட்படுத்திய இந்த பாடத் திட்டங்கள் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை மையமாகக் கொண்டிருந்ததாக மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் ஷாரி கூறினார்.

திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சோயா மூலம் உணவுத் தயாரிப்பு, தையல் பயிற்சி, லோஷன் தயாரிப்பு பயிற்சி,  உணவு மற்றும்  பிஸ்கட் தயாரிப்பு ஆகியவையும் அடங்கும் என்று அவர் சொன்னார்.

ஆளுமைத் திறன் வளர்ப்பைப் பொறுத்த வரை டிஜிட்டல் சந்தைக்கான மின்-தொழில் முனைவோர் அடிப்படைப் பயிற்சி, பி40 வர்த்தகர்கள் உருமாற்றப் பயிற்சி, இணைய வகுப்புகள் ஆகியவையும் நடத்தப்படுகின்றன என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

2024-2026 சிலாங்கூர் மகளிர் கொள்கை நடவடிக்கைத் செயல்திட்டத்தின் இலக்குகளை வழிகாட்டியாகக் கொண்டு மகளிர் திறன் மேம்பாட்டு முன்னெடுப்புகள் அமல்படுத்தப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

மகளிர் தலைமைத்துவ அகாடமியின் (ஏ.கே.டபள்யூ.) மூலம் பொதுத் சேவையில் மகளிரின் தலைமைத்துவ திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த 12 மாதப் பயிற்சி இவ்வாண்டில் நான்காம் கட்டத்தை எட்டியுள்ளது என்றார் அவர்.

இந்த ஏ.கே.டபள்யூ. திட்டத்தின் மூலம் இதுவரை 282 பட்டதாரிகள் உருவாக்கப் பட்டுள்ளதாகக் கூறிய அவர், அவர்கள் அனைவரும் சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.


Pengarang :