NATIONAL

வெள்ள அபாயத்தை தணிக்க 12வது மலேசியத் திட்டத்தின் கீழ் வெ.95 கோடி ஒதுக்கீடு

கோலாலம்பூர், ஜூலை 9 – நாடு  முழுவதும் நதி பாதுகாப்பு மற்றும்  வெள்ளத்தால் எழும்  அவசரகால பணிகளுக்காக 12வது மலேசியா திட்டத்தின்  கீழ் அரசாங்கம் 95 கோடி வெள்ளியை  ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக  நதிகளைப் பாதுகாக்க  அந்த நிதியில் 41 கோடி வெள்ளி  ஒதுக்கப் பட்டதாக எரிசக்தி  மாற்றம் மற்றும் நீர் உரு மாற்றத் துறை  அமைச்சரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப்  கூறினார்.

எஞ்சிய  54 கோடி வெள்ளி வெள்ளத்தால் சேதமடைந்த கட்டமைப்புகளை சீரமைப்பது போன்ற  அவசர காலப் பணிகளை மேற்கொள்ள வடிகால் மற்றும் நீர்ப் பாசனத் துறைக்கு வழங்கப்பட்டது  என்றார் அவர்.

இருப்பினும்,  இந்த  நிதி ஒதுக்கீடு  ஒவ்வொரு மாநிலத்தின் தற்போதைய தேவைகளை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் இன்று மக்களவையில்  எழுப்பட்ட வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கையில்  அவர் கூறினார்.

முறையற்ற வடிகால் மற்றும் நீர்ப்பாசன முறையினால் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்சினையை சமாளிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வடிகால் நீர்பாசனத் துறைகளுக்கு  வழங்கப்பட்ட ஒதுக்கீடு குறித்து  பெங்கலான் செப்பா தொகுதி உறுப்பினர்  டத்தோ அகமது மர்ஸூக் ஷாரி கேள்வி எழுப்பியிருந்தார்.

நாட்டில்  வடிகால் அமைப்பின் மேலாண்மை வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை,  ஊராட்சி மன்றங்கள், மாவட்ட அலுவலகங்கள், பொதுப்பணித் துறை மற்றும் மேம்பாட்டாளர்கள்  உட்பட பல்வேறு தரப்பினரால் நிர்வகிக்கப்படுகிறது என ஃபாடில்லா குறிப்பிட்டார்.


Pengarang :