SELANGOR

ஊட்டச்சத்து பிரச்சனையைக் களைய ஒவ்வொரு தொகுதியிலும் குழந்தைகள் ஆரோக்கிய மையம் உருவாக்கம்

ஷா ஆலம், ஜூலை 9- குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைக்க ஒவ்வொரு மாநில சட்டமன்றத் தொகுதியிலும் ‘அனாக் சிலாங்கூர் அனாக் சாயா’  (அசாஸ்) மையத்தை மாநில அரசு நிறுவும்.

ஒவ்வொரு  சட்டமன்ற தொகுதியிலும் உள்ள   சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர்களால் (சுக்கா) ஒருங்கிணைக்கப்பட்ட சோதனைக்கு   உட்படுத்தப்பட்டப் பின்னர் அக்குழந்தைகளுக்கு உணவு கூடை உதவி வழங்கப்படும் என்று  பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

குழந்தைகளின் உடல் வளர்ச்சி விகிதத்தை மதிப்பிடுவதற்காக ஆறு மாதங்களுக்கு அவர்கள் மீது கண்காணிப்பு செயல்முறை  மேற்கொள்ளப்படும்  என்று அவர் சொன்னார்.

குழந்தைகளுக்கு சத்துணவு  வழங்குவதன் முக்கியத்துவம் பற்றி பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சிலாங்கூர் அரசாங்கம்   ஒன்பது மாவட்டங்களில் அசாஸ்  விழாவையும்  நடத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அடைவுநிலை மேலும் ஆக்ககரமானதாக இருப்பதை  உறுதி செய்வதற்காக இந்த திட்டத்தின் செயலாக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது என்றும் அவர்  கூறினார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று  கேள்விக்கு பதிலளித்த ஜமாலியா, செலங்கா செயலி  மூலம் மிகவும் முறையான மற்றும் திறமையான முறையில் குழந்தைகளின் வளர்ச்சி நிலைத் தரவை நிர்வகிப்பதன் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை  நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.

தற்போது, தரவு மேலாண்மை முறை மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அப்பணி வரும் ஆகஸ்டு மாதம்  நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

சிலாங்கூரில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த  அசாஸ்  திட்டத்தைத் தொடர மாநில அரசு இவ்வாண்டு மொத்தம் 700,000 வெள்ளியை  ஒதுக்கீடு செய்துள்ளது


Pengarang :