NATIONAL

போலீஸ் நிலைய நுழைவாயில்கள் இரவு 10.00 மணிக்கு மூடப்பட்டாலும் பணிகள் வழக்கம் போல் நடைபெறும்- ஐ.ஜி.பி.

கோலாலம்பூர், ஆக 10 – இரவு 10.00 மணிக்கு நுழைவாயில்களை மூடும்படி
நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள
போதிலும் அரச மலேசிய போலீஸ் படை வழக்கம் போல் சேவைகளை
வழங்கி வரும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் வழக்கம் போல் புகார்களை அளிக்க முடியும் என்பதோடு
சீராக செயலாக்க நடைமுறை புக்கிட் அமான் நிர்வாகத் துறை இயக்குநர்
டத்தோஸ்ரீ அஸ்மி காசிமிடம் ஒப்படைக்கப்பட்டப் பின்னர் இதன்
தொடர்பான வழிகாட்டி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும்
விநியோகிக்கப்படும என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐ.ஜி.பி.)
டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோன்
வலியுறுத்தியது போல், பொது மக்கள் புகார் செய்யும் இடம் மற்றும்
அச்சுறுத்தல்களை இலக்காகக் கொண்ட இடம் என்ற இருவேறு நிலைகளை
காவல் நிலையங்களில் நாங்கள் சமன்படுத்த வேண்டியுள்ளது என்று அவர்
சொன்னார்.

இரவு 10.00 மணிக்கு நுழைவாயில்களை மூடும் உத்தரவு தற்போதைக்கு
வெகு தொலைவில் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள காவல்
நிலையங்களில் மட்டுமே அமல்படுத்தப்படும் என்றும் அவர்
தெளிவுபடுத்தினார்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பதிலளித்த இஸ்மாயில்,
இரு போலீஸ்காரர்களைப் பலி கொண்ட ஜோகூர், உலு திராம் காவல்
நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின்
நுழைவாயில்களை இரவு 10.00 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகக்
கூறியிருந்தார்.

காவல் துறையினரின் சேவையை பொது மக்கள் பெறும் அதேவேளையில்
பணியில் உள்ள போலீஸ்காரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்
நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :