NATIONAL

சிலாங்கூர் சுல்தான் கிண்ண கால்பந்து- பாதுகாப்புப் பணியில் 2,000 பேர் ஈடுபடுவர்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10 – எதிர்வரும் ஆகஸ்டு 17 ஆம் தேதி மெர்டேக்கா அரங்கில்  நடைபெறும்   சிலாங்கூர் சுல்தான் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் (டி.எஸ்.எஸ்.சி.)
பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அதன் தலைவரும் நிர்வாகியுமான  டான்ஸ்ரீ அப்துல்  கரீம் முனிசார் கூறினார்.

இதன் அடிப்படையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமலிருப்பதை உறுதி செய்ய   சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் போலீஸார் உட்பட 2,000 உறுப்பினர்கள் பாதுகாப்பு   பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் காவல் துறையினர் பாதுகாப்புக் குழுவை பலப்படுத்துவார்கள். சுமார் 2,000  பாதுகாப்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பாதுகாப்பில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று  அவர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தில்  நேற்று நடைபெற்ற சிலாங்கூர் சுல்தான் கிண்ண கால்பந்துப் போட்டியின்  விளம்பர சுற்றுப்பயணம் மற்றும் டிக்கெட் ஒப்படைப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இப்போட்டிக்காக மெர்டேக்கா அரங்கின்  மைதானத்தை மேம்படுத்தும் பணிகள் இம்மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்றார் அவர்.

நாங்கள் அரங்கைப் பழுதுபார்க்கும் பணிகளை கண்காணித்து வருகிறோம். ஜூலை இறுதிக்குள் அனைத்தும் பணிகளும் முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என அவர் சொன்னார்.

சிங்கப்பூருடனான  இந்த மதிப்புமிக்கப்  பாரம்பரிய  போட்டி கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக நான்கு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டு எதிர்வரும் ஆகஸ்டு 17 ஆம் தேதி மீண்டும் நடத்தப்படுகிறது.

ஏறக்குறைய 20,000 ரசிகர்கள் இப்போட்டியைக் காண வருவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.இப்போட்டிக்கு குறைந்த பட்சம்  10 வெள்ளி வரை டிக்கெட்டுகள்  விற்கப்படும்.

சிலாங்கூர்  குழு  2001, 2003, 2005, 2008, 2012, 2013, 2014, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில்  ஒன்பது முறை இந்த கிண்ணத்தை வென்றுள்ளது.

சிங்கப்பூர் ஏழு முறை அதாவது 2006, 2007, 2009, 2010, 2011, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.


Pengarang :