NATIONAL

மதிப்பீட்டு வரி உயர்வு-மேல் முறையீடு செய்ய பொது மக்களுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஜூலை 10 – அடுத்தாண்டு அமலுக்கு வரவிருக்கும் மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிராக முறையீடு செய்ய சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் இன்னும் வாய்ப்பு உள்ளதாக  ஊராட்சி மன்றங்களுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ  இங் சுயி லிம் கூறினார்.

இந்த மதிப்பீட்டு வரி உயர்வு 25 விழுக்காட்டிற்கும் அதிகமாக இல்லாதிருப்பதை மாநில அரசு உறுதி செய்துள்ளதாகக் கூறிய அவர், இந்த வரி உயர்வுக்கு எதிராக பொது மக்கள் செய்யும் முறையீடுகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களின் மேல் முறையீட்டுக் குழுக்கள் ஆய்வு செய்யும் என்றார்.

புதிய மதிப்பீட்டு வரி தொடர்பான அறிக்கை அனைத்து சொத்து உரிமையாளர்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டது. எனினும், இதற்கு ஆட்சேபம் தெரிவிக்க அல்லது மேல் முறையீடு செய்ய விரும்புவோர் ஊராட்சி மன்றங்கள் அல்லது கவுன்சிலர்கள் மூலம் அவ்வாறு செய்யலாம் என அவர் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ள போதிலும் மதிப்பீட்டு வரி வீட்டுக்கு வீடு மாறுபடுவது ஏன் என உலு பெர்ணம் உறுப்பினர் முயஸூடின் மஹாயுடின் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் டத்தோ இங் இவ்வாறு சொன்னார்.

ஊராட்சி மன்றங்களின் சேவையை தரம் உயர்த்துவதற்கான மாநில அரசின் திட்டம் குறித்து சுங்கை ராமால் உறுப்பினர் முகமது ஷாபி ங்கா கேள்வி எழுப்பினார். ஊராட்சி மன்றங்களின் சேவையில் பொது மக்களில் சிலர் அதிருப்தி கொண்டுள்ளதோடு இந்த வரி உயர்வு நியாயமற்றது எனக் கருதுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

சில ஊராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தில் 30 முதல் 50 விழுக்காட்டுத் தொகையை குப்பைகளை அகற்றுவதற்கு பயன்படுத்துவதால் இந்த வரி உயர்வு அவசியமான ஒன்றாக உள்ளது என்று இங் பதிலளித்தார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் 20 முதல் 40 ஆண்டுகளாக மதிப்பீட்டு வரியை மறு ஆய்வு செய்யவில்லை.

காஜாங் நகராண்மைக் கழகம் 39 ஆண்டுகளாக (1985) மதிப்பீட்டு வரியை உயர்த்தவில்லை. கோல லங்காட் நகராண்மைக் கழகம் 37 ஆண்டுகளாகவும் (1987), செலாயாங் நகராண்மைக் கழகம் 32 ஆண்டுகளாகவும் (1989) மதிப்பீட்டு வரியை மறுஆய்வு செய்யவில்லை.

சுபாங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மற்றும் பண்டார் சன்வே ஆகிய இடங்களுக்கான மதிப்பீட்டு வரியை கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கவில்லை. யுஎஸ்ஜே, பூச்சோங், ஸ்ரீ கெம்பாங்கான், மற்றும் செர்டாங் ஆகிய பகுதிகளில் கடந்த 1996 முதல் அதாவது 28 ஆண்டுகளாக வரி உயர்வை அமைல்படுத்தவில்லை.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 28 ஆண்டுகளாகவும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் 27 ஆண்டுகளாகவும் ஷா ஆலம் மாநகர் மன்றம் 18 ஆண்டுகளாகவும் வரியை உயர்த்தவில்லை.

இருப்பினும், சொத்து உரிமையாளர்கள் இந்த புதிய மதிப்பீட்டு வரிக்கு தங்களின் ஆட்சேபத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களிடம் பொது மக்கள் தங்கள் ஆட்சேபத்தை தெரிவிக்கலாம்.

நகரத் திட்டமிடலை ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்கு இந்த மதிப்பீட்டு வரி மறு ஆய்வு மிக முக்கியம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே 30ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :