NATIONAL

டீசல் மானியம் பெறத் தகுதியுள்ள சரக்கு வாகனப் பட்டியலை  விரிவாக்க அரசு பரிசீலனை

ஷா ஆலம், ஜூலை 10- டீசல் மானியம் பெற தகுதியான பட்டியலில் உள்ள சரக்கு போக்குவரத்து  வாகனப் பிரிவுகளை விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை 33 வகையான தரை மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்கள்  மானிய  டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (எஸ்.கே.டி.எஸ்.) கீழ் மானியம் பெற்றுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமது அலி கூறினார்.

இந்த மானியத் திட்டம்   தொடர்பாக எந்தவொரு பரிந்துரையையும் ஏற்கத் தாம் தயாராக இருப்பதாகத் அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் மற்றும் சிறிய அளவில் செம்பனை பயிரிடுவோர் பயன்படுத்தும் ரோரோ வகை போக்குவரத்து லாரிகளையும் இந்த பரிந்துரை உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

இதன் தொடர்பில் நாங்கள் தோட்ட மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சு, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சை அணுகியுள்ளோம்.  இதன் மூலம் அவர்கள்  குறிப்பிட்ட பங்களிப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்த முடியும் என்றார் அவர்.

பொதுவாக பயனீட்டாளர்களின் தினசரி அத்தியாவசியப் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான  விநியோகச் சங்கிலியுடன்  நேரடித்  தொடர்புடையத் துறையாக  இருந்தால் தணிப்பு மற்றும் தலையீட்டு திட்டத்தை முன்மொழிவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என அவர் சொன்னார்.

பிரதமர் (டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்) அறிவித்தபடி பூடி மடாணி தவிர எங்களிடம் ஒரு ஆலோசனைக் குழு உள்ளது (டீசல் இலக்கு மானியம் தொடர்பாக) என்று நாடாளுமன்றத்தில் இன்று  லாருட்  உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

தற்போது பொதுப் போக்குவரத்துத் துறையில் உள்ள  பள்ளிப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், நின்று செல்லும் பேருந்துகள், டாக்சிகள், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகள் என 10 வகையான போக்குவரத்து வாகனங்கள் டீசல் மானியங்களைப் பெறுகின்றன என அவர் விளக்கினார்.

இவை தவிர,  பிரைம் மூவர்ஸ், பொது சரக்கு லோரிகள், விவசாய பொருட்கள், தண்ணீர், மாவு, கால்நடைக் கூண்டுகள், போக்குவரத்து சேவைகள் மற்றும் கழிவு மேலாண்மை,  பேருந்துகள் அல்லது பயணி வேன்கள், லோரிகள், பேருந்துகள், உணவு கேட்டரிங் வேன்கள் ஆகியவையும் இலக்கு மானியப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்றார் அவர்.


Pengarang :