NATIONAL

அடுத்தாண்டு ஆசியான் தலைவர் பொறுப்பை ஏற்க மலேசியா தயார்

ஷா ஆலம், ஜூலை 10 – கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூன்று அடிப்படைக்  கூறுகளான பாதுகாப்பு,  அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றுடன்   2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் பதவியை ஏற்பதற்கு மலேசியா தயாராகி வருகிறது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் கூறினார்.

அடுத்தாண்டு செயல்படுத்துவதற்காகக் கடந்த ஜூன் மாதம் வரை தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பணிக்குழுக்கள் மட்டத்தில் மொத்தம் 257 கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்  ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்

ஆசியான் கூட்டம்  கோலாலம்பூரில் மட்டுமல்லாமல் கோத்தா கினாபாலு, லங்காவி, ஜோகூர், மலாக்கா மற்றும் பினாங்கு போன்ற நாட்டின் பிற மாநிலங்களிலும்  நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

ஆசியான் தலைவர் பதவியை வகிக்கும் போது, தொழில்முனைவோர், வர்த்தகம் மற்றும் மாநிலங்களுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பறைசாற்றுவதே எங்கள் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

பல விருந்தினர்கள்  வருகையளிக்கும் நிலையில் நமது நாட்டின் கலாச்சார வளத்தையும்  ஆசியானில் உள்ள பெரிய பொருளாதார துறையையும் காட்ட ஒரு அடிப்படையாக பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

எங்களின் இந்த விருப்பத்தை நாங்கள் மாநிலங்கள், ஊராட்சி மன்றங்கள்  மற்றும் தனியார் துறையிடம் தெரிவித்துள்ளோம் என்று அவர் மேலும்  கூறினார்.

மக்களவையில் இன்று  2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவராக ஆவதற்கான அரசாங்கத்தின் ஏற்பாடுகள் குறித்து  கோம்பாக்  உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.


Pengarang :