SELANGOR

பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணத் திட்டம் மூலம் 2020 முதல் வெ.3.8 கோடி வசூல்

ஷா ஆலம், ஜூலை 11- கடந்த 2020ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட
பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பைகளுக்கு 20 காசு கட்டணம் விதிக்கும்
திட்டத்தின் வாயிலாக மாநில அரசு இதுவரை 3 கோடியே 80 லட்சம்
வெள்ளியை வசூலித்துள்ளது.

வசூலிக்கப்பட்ட அந்த தொகை சுற்றுச்சூழலை நேசிப்பதன் மற்றும்
பாதுகாப்பதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் நீடித்த
சுற்றுச்சூழல் திட்டங்களுக்குச் செலவிடப்பட்டதாக சுற்றுச்சூழல்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

நெகிழிப் பைகளுக்கான கட்டணம் மூலம் பெறப்பட்ட அந்த தொகை வரும்
ஜூலை மாதம் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும்
சிலாங்கூர் மாநில நிலையிலான 2024 சுற்றுச்சூழல் விழா, சோலார்
விளக்குகளைப் பொருத்தும் திட்டம், மரம் நடும் இயக்கம், புவி தினம்
மற்றும் சமூக வேளாண் திட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு
பயன்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

பெட்டாலிங் ஜெயா, ஓன் உத்தாமா பேரங்காடியில் நடைபெறவிருக்கும்
சிலாங்கூர் மாநில நிலையிலான சுற்றுச்சூழல் விழா தொடர்பில் நேற்று
இங்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

சிலாங்கூரில் பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பது
தொடர்பில் பொது மக்களின் கருத்தைப் பெறுவதற்கான
கணக்கெடுப்பையும் இந்நிகழ்வில் மாநில அரசு மேற்கொள்ளும் என்று
அவர் குறிப்பிட்டார்.

பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணத்தை அவசியம் உயர்த்த வேண்டுமா
என சில தரப்பினர் கேள்வியெழுப்புகின்றனர். ஆகவே, இந்த விழாவின்
வாயிலாகப் பொதுமக்களின் கருத்தைப் பெற மாநில அரசு விரும்புகிறது
என்றார் அவர்.

‘பிளாஸ்டி இல்லா இயக்கம்‘ எனும் கருப்பொருளிலான இந்த விழா,
அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாட்டையும் உற்பத்தியையும்
குறைக்கும் முயற்சியாகப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை
ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.


Pengarang :