NATIONAL

சாலை விபத்துகளால் அரசுக்கு கடந்தாண்டு 2,500 கோடி வெள்ளி இழப்பு

ஷா ஆலம், ஜூலை 11- சாலை விபத்துகள் காரணமாக அரசாங்கத்திற்குக்
கடந்தாண்டு 2,500 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டது. இந்த தொகை
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 விழுக்காட்டைப்
பிரதிபலிக்கிறது.

கடந்தாண்டைக் காட்டிலும் கூடுதலாக பதிவாகியுள்ள இந்த இழப்பு,
மரணம் மற்றும் கடுமையான காயங்கள் தொடர்பான காவல் துறையின்
ஆய்வினைப் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று போக்குவரத்து
அமைச்சர் டத்தோஸ்ரீ அந்தோணி லோக் கூறினார்.

அந்த ஆய்வின் அடிப்படையில் பார்க்கையில் கடந்த 2010ஆம் ஆண்டு
ஏற்பட்ட இழப்பு 1,800 கோடி வெள்ளி அல்லது மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 2.2 விழுக்காடாக இருந்தது என்று அவர் கூறியதாக பெரித்தா
ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்தாண்டு 2,500 கோடி வெள்ளியாக உயர்வு
கண்டுள்ளது. என அவர் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது
தெரிவித்தார்.

சாலை விபத்துகளால் ஆண்டு தோறும் ஏற்படும் இழப்பின் அளவு மற்றும்
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஆக்ககரமான நடவடிக்கைகள்
குறித்து லாபிஸ் உறுப்பினர் பாங் ஹோக் லியோங் கேள்வியெழுப்பியிருந்தார்.

சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆக்ககரமான
நடவடிக்கையாக 2022-2030 மலேசியா சாலை பாதுகாப்புத் திட்டத்தை
போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்தோணி லோக்
சொன்னார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைக்கேற்ப வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரண எண்ணிக்கையை குறைந்த பட்சம் 50 விழுக்காடாகக் குறைப்பதை இந்த திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது என்றார் அவர்


Pengarang :