NATIONAL

மிண்டானோவில் இன்று காலை  வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது

கோலாலம்பூர், ஜூலை 11 – பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோ அருகே இன்று காலை மலேசிய நேரப்படி 10.13 மணியளவில் ரிக்டர் அளவில்  6.6  எனப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

,இந்த நிலநடுக்கம்  இசபெலா நகரத்திலிருந்து சுமார் 154 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும் 632 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையமிட்டிருந்தது என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

சபா மற்றும் லபுவான் ஆகிய இடங்களில் இந்த நடுக்கம் உணரப்பட்டது. ஆயினும் இந்நிலநடுக்கம்  மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.

இந்த பூகம்பம் தொடர்பில் பொதுமக்கள் வானிலை ஆய்வுத் துறையை  +60379678066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது மேலும் தகவலுக்கு http://www.met.gov.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.

இதனிடையே,  நிலநடுக்கம் தொடர்பில் காலை 10.45 மணிக்கு தகவல்  கிடைத்தவுடன் நில அதிர்வைக் கண்காணிக்க  கோத்தா கினாபாலு மற்றும் தாவாவிற்கு மூன்று குழுக்கள் அனுப்பப்பட்டதாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார்.

இப்பேரிடரால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என அவர் சொன்னார்.

நில அதிர்வைத் தொடர்ந்து மெனரா கினாபாலு, விஸ்மா வனிதா மற்றும் கோண்தா கினபாலு மாநகர் மன்றக்  கட்டிடத்தில் உள்ள பணியாளர்களும் பொதுமக்களும் வெளியேற்றப்பட்டு  ஒன்று கூடும் மையங்களில் திரண்டனர்.


Pengarang :