NATIONAL

இணைய ஆபத்துகள் குறித்த பாதுகாப்பு பிரச்சாரம்

கோலாலம்பூர், ஜூலை 11 – இணைய ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தகவல் தொடர்பு அமைச்சகம் இணையப் பாதுகாப்பு பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது.

இந்தத் திட்டம் இணைய அச்சுறுத்தல், மோசடிகள் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற சிக்கல்களை முன்னிலைப்படுத்தவும், அதே நேரத்தில் தனிப்பட்ட தரவு மற்றும் இணையத் தளங்களை பாதுகாப்பதற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

“இதை பள்ளிகளில் தொடங்க வேண்டிய அவசியத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஏனெனில், இதன் மூலம் குழந்தைகள் சமூக ஊடகங்களின் ஆபத்துகள் மற்றும் திறன்களை அறிந்து கொள்ள முடியும். 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, சமூக ஊடகக் கணக்குகளைத் திறப்பதை நாங்கள் தடை செய்துள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாகப் பல குழந்தைகள் அதை பற்றி அறியாமல் இருக்கின்றனர், ”என்று அவர் 150 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசத்தை விநியோகித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான இணைய பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இணையப் பகடிவதையைத் தடுப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க அமைச்சகம் டிக் டோக் பிரதிநிதிகளை சந்திக்கும் என்றார்.

இணையப் பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் டிக்டாக் பிரபலம் மரணம் குறித்து, விசாரணை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஃபஹ்மி கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, 29 வயதான அந்நபர் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

– பெர்னாமா


Pengarang :