NATIONAL

அரசாங்கக் கிளினிக்குகளில் ஒவ்வோராண்டும் 1,800க்கும் மேற்பட்டோருக்கு மனநல சிகிச்சை

ஷா ஆலம், ஜூலை 12- கடந்த  2020ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு  31 மார்ச் வரையிலான நான்கு ஆண்டுகளில் சிலாங்கூர் முழுவதும் உள்ள மாவட்ட சுகாதார கிளினிக்குகளில் மொத்தம் 10,459 பேர்  மனநலக் கோளாறு தொடர்பான சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் முழுவதிலும் உள்ள மாவட்ட சுகாதார கிளினிக்குகளில் மனநல சிகிச்சை பெற்றவர்கள் தொடர்பான எண்ணிக்கையின் மூலம் இந்த தரவுகள்  பெறப்பட்டன என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

மனநலப் பாதிப்பு தொடர்பில் கடந்த 2020ஆம் ஆண்டில் 1,858 சம்பவங்கள் பதிவாகிய வேளையில்  2021 (1,942), 2022 (2,065), 2023 (2,297) மற்றும் 2024 முதல் மார்ச் 31 வரை, 2,297 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன என்று அவர் சொன்னார்.

இம்மாநிலத்தில்  மனநலப் பாதிப்பு சீராகி சுகாதார கிளினிக்குகளில்  தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டு காலத்தில் ஏறக்குறைய ஒரே மாதிரியாக  உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பதிவான மாவட்டமாகக் கிள்ளான் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 2020 மற்றும் 2024 க்கு இடையே ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 500 பேர்  பொது சுகாதார கிளினிக்குகளில் அந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

வாழ்க்கையில்  மன உறுதியைக் குறைத்து அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய  பொருளாதார சிக்கல்கள், குடும்பம் மற்றும் திருமண பிரச்சனைகள் மற்றும் பணியிட சவால்கள் ஆகியவை இதற்கு  முக்கிய காரணங்களாக விளங்குகின்றன என்று ஜமாலியா  கூறினார்.

வாழ்க்கைச் சவால்களைச் எதிர்கொள்வதற்கு ஏதுவாக  இத்தகைய  நபர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து சமூக ஆதரவைப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கூடுதலாக,  வாழ்க்கை முறையும் இதில்  குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. சிலர் மன அழுத்தத்தை சமாளிக்கப் போராடுவதோடு  போதைப் பழக்கத்தில்  ஈடுபாடு கொண்டவர்களாகவும் உடலாரோக்கிய நடவடிக்கைகளில் ஆர்வம் இல்லாதவர்களாகவும் உள்ளனர் அவர் இன்று மாநில சட்டமன்றத்தில் கூறினார்.

மனநல நோயாளிகளின் எண்ணிக்கையில் பெட்டாலிங் மாவட்டம்   இரண்டாவது இடத்தில் உள்ளது.  இங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 400 நோயாளிகள்  சிகிச்சைக்காக வருகின்றனர். அதைத் தொடர்ந்து மூன்றாவது  இடத்தில் சிப்பாங் மாவட்டம் (300 நோயாளிகள்) உள்ளது என்றார் அவர்.

மற்ற மாவட்டங்களில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 70 முதல் 200 சம்பவங்கள்  பதிவு செய்யப்படுகின்றன என்றார்.

மேலும்,  மக்களிடையே காணப்படும் மன ஆரோக்கியத்திற்கு எதிரான  இயல்பியல் கூறு  மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் சுகாதார சேவைகளை பயன்படுத்துவதற்கு தயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் விளக்கினார்.

மனநலப் பிரச்சனைகளைக் கையாள மாநில அரசு 2021 ஆம் ஆண்டில் சிலாங்கூர் மனநலம் (சேஹாட்) திட்டத்தை அறிமுகப்படுத்தியது  என்றும் அவர் கூறினார்.


Pengarang :