NATIONAL

போக்குவரத்து தரவு மையத்தை அமைக்க மாநில அரசு திட்டம்

ஷா ஆலம், ஜூலை 12- வாகனப் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு
நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணும் முயற்சியாகப் போக்குவரத்து
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மையத்தை உருவாக்குவது குறித்து மாநில அரசு
பரிசீலித்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.) துணையுடன் உருவாக்கப்பட்ட சிலாங்கூர்
போக்குவரத்து ஆய்வகம், வாகன இயக்கம் மற்றும் பொது போக்குவரத்து
சேவை தொடர்பான நிகழ்நேர தரவுகளைச் சேகரிக்கும் என்று முதலீடு,
வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
இங் ஸி ஹான் கூறினார்.

சிலாங்கூர் தகவல் தொழில்நுட்ப மற்றும் இலக்கவியல் பொருளாதாரக்
கழகத்தின் கீழ் சிலாங்கூர் போக்குவரத்து ஆய்வகத்தை உருவாக்கும்
திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது
என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூரில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் பரபரப்புமிக்க இடங்களில்
நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கான தீர்வாகவும் இது
அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் மத்திய
தவணைக்கான மறுஆய்வை முடித்து வைக்கும் விவாதத்தில் கலந்து
கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

சிலாங்கூர் போக்குவரத்து ஆய்வக உருவாக்கத்திற்கு மத்திய அரசு ஆதரவு
வழங்கியுள்ளதாகக் கூறிய இங், புத்ராஜெயாவின் நிதி பங்களிப்பின்றி
பொது போக்குவரத்து மேலாண்மையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த
இயலும் என்றார்.

ஸ்மார்ட் சிலாங்கூர் எனப்படும் இலவசப் பஸ் சேவையில் வழித்தட
மறுசீரமைப்பை மாநில அரசு இவ்வாண்டின் நான்காம் காலண்டில்
மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவைக்கான வழித்தடங்களை மாநில அரசு
மறு வடிவமைப்புச் செய்து பெருந்திட்டம் ஒன்றையும் உருவாக்கும்
என்றார் அவர்.


Pengarang :