NATIONAL

அந்நிய நாட்டினருக்கு வாடகைக்கு விடப்படும் வர்த்தக உரிமங்கள் ரத்து செய்யப்படும்

கோலாலம்பூர், ஜூலை 12 – ஊராட்சி மன்றங்களின் விதிமுறைகளை மீறி வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விடப்படும் வர்த்தக உரிமங்கள் ரத்து செய்யப்படும் என பொருளாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

வர்த்தக மற்றும் தொழில்துறை உரிமச் சட்ட விதிகளின் கீழ் அங்காடி வியாபாரிகள், சிறு வியாபாரிகள், வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், உணவகங்கள், கார் பட்டறைகள் மற்றும் சந்தைக் கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கவோ அல்லது வைத்திருக்கவோ வெளிநாட்டினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அது கூறியது.

இதற்கான விதிமுறைகள் நடைமுறையில் இருந்தபோதிலும் குறைந்த தண்டனை மற்றும் முறையான அமலாக்கமின்மை போன்ற பலவீனங்கள் பரவலான மீறல்களுக்கு வழிவகுத்துள்ளன என அமைச்சு நேற்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிட்ட பதிலில் கூறியது.

வாடகைத் தேடுதலின் சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் வாடகை எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடகை எதிர்ப்பு சட்டத்திற்கான செயல்திட்டத்தை தயாரிப்பதற்கான ஆய்வை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆய்வு வாடகை தேடுதல் மற்றும் அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சு கூறியது.

வாடகைத் தேடலைத் தடுப்பதில் சட்டத்தில் நிலவும் பலவீனங்களைக் களைய இந்த  உத்தேசச் சட்டம் உதவும்.

தற்போது அமலில் உள்ள 2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் , 2010ஆம் ஆண்டு போட்டித் திறன் சட்டம், 2016ஆம் ஆண்டு நிறுவனச் சட்டம் மற்றும் பல்வேறு துணைச் சட்டங்கள் போன்றவை இப்பிரச்சினையைக் களைவதற்கு போதுமானதாக இல்லை.

அலி பாபா எதிர்ப்புச் சட்டம் மீதான அரசாங்கத்தின் குறிப்பிட்ட அணுகுமுறை குறித்து கோல திரங்கானு உறுப்பினர் டத்தோ அகமது அம்சாத் முகமது எழுப்பிய கேள்விக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.


Pengarang :