NATIONAL

அந்தோணி லோக்கிற்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் மாரடைப்புடன் தொடர்புடையது அல்ல- துணையமைச்சர் விளக்கம்

ஈப்போ, ஜூலை 12 –  கடந்த புதன்கிழமை (ஜூலை 10)  மக்களவைக் கூட்டத்தில்  வாய்வழி கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் மாரடைப்புடன் தொடர்புடையது அல்ல.

அமைச்சர் எதிர்கொண்ட உடல் தகுதி நிலை பிரச்சனையே இதற்குக் காரணம் என்று  துணை சுகாதார அமைச்சர் டத்தோ லுகானிஸ்மன் அவாங் சௌனி கூறினார்.

முன்னதாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் லோக் அவசரமாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அவர் உள்ளை நுழைந்த அந்த நேரத்தில்  வாய்வழி கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய அவரது முறையும் வந்தது.

அவர் அவசரமாக அவைக்குள் நுழைந்து  வாய்வழி கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ஆகவே, இது மாரடைப்பு அல்லது  வேறு எதனுடனும் (மற்ற நோய்களுடன்) தொடர்புடையது அல்ல. அது தனிநபரின் உடற்தகுதி பற்றியது. நீங்கள் ஓடிக் கொண்டிருந்தால் சில சமயம் உங்களுக்கும் மூச்சு திணறல் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று 13வது ஆசியான் மாநாடு மற்றும் 10வது பேராக் சுகாதார மாநாட்டில்  கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் லுகானிஸ்மன் இவ்வாறு கூறினார்.

கடந்த புதன்கிழமை, அவையில்   பேசத் தொடங்கியபோது லோக்கிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் உண்டானது. பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் கொடுக்குமாறு லோக் சபாநாயகரைக் கேட்டார்.

அதைத் தொடர்ந்து  அமர்வைத் தொடருமாறு போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபுல்லாவை   துணை சபாநாயகர் எலிஸ் லாவ் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில்,  முன்னெச்சரிக்கை  நடவடிக்கையின் ஒரு பகுதியாக நோயைக் கண்டறிய கட்டாய சுகாதார பரிசோதனை மேற்கொள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று லுகானிஸ்மேன் கூறினார்.


Pengarang :