NATIONAL

சட்டவிரோதக் குடியேறிகள் 40 பேர் கைது

கோலாலம்பூர், ஜூலை 13: பிரிக்ஃ பீல்ட்ஸில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 4 மணி வரை நடத்திய சோதனையில் சட்டவிரோதமாகக் குடியேறிய 40 பேரை கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களில் இந்தியா (25), இலங்கை (10), பாகிஸ்தான் மற்றும் மியான்மரைச் சேர்ந்த தலா இருவர் மற்றும் பங்களாதேஷ் பிரஜை ஒருவரும் அடங்குவதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை  இயக்குநர் வான் முகமட் சௌபீ வான் யூசோப் தெரிவித்தார்.

“அவர்கள் அனைவரும் மலேசியாவில் தங்குவதற்கு பாஸ்போர்ட் அல்லது அனுமதி பெறாதது, காலாவதியான பாஸ்போர்ட்டுகள் மற்றும் அதிக காலம் தங்கியிருப்பது உள்ளிட்ட குற்றங்களைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது” என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அபார்ட்மெண்ட் யூனிட்டும் மாதத்திற்கு RM2,000க்கு மேல் வாடகைக்கு விடப்பட்டு, அதில் பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் உணவுத் துறைகளில் வேலை செய்யும் எட்டு வெளிநாட்டவர்கள் வசிக்கின்றனர் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டவர்களும் புக்கிட் ஜலீல்  குடிநுழைவுத்துறை   டிப்போவுக்கு அனுப்பப்பட்டு, குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் கீழ் விசாரிக்கப்பட்டனர்.

– பெர்னாமா


Pengarang :