கோலா லங்காட், ஜூலை 13: சிலாங்கூர் வேளாண் ஏல மையம் (பிஎல்ஏஎஸ்) சிஜாங்காங்கில் திறக்கப்படவுள்ளது. இது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் செயல்படும் என்று விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதில் இரண்டு ஏக்கர் விற்பனை மையத்தில் இறைச்சி, மீன், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உள்ளூர் தொழில் முனைவோரால் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விவசாய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று இஷாம் ஹாசிம் கூறினார்.

“ஜப்பான் மற்றும் கொரியாவிற்குப் பணி நிமித்தம் பயணம் மேற்கொண்ட போது, இந்த ஏல மைய நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்ததைக் கண்டோம், அப்படி பட்ட ஒன்றை  இங்கு  சிஜாங்காங்கில்  அறிமுகப்படுத்த  முடிவு செய்தோம்  என்றார்.

“இந்த ஏல மையத்தில் நேரடி (manual) மற்றும் இணைய முறை விற்பனை நடத்தப்படும். தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை ஏலம் விடுவதை எளிதாக்க இன்டர்நெட் திங்ஸ் (IoT) செயலி உருவாக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

நேற்று பத்து 7, சிஜாங்காங்கில் திறக்கப்பட்ட ஏல மையத்தை ஆய்வு செய்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

ஏல மையம் சிறப்பாக  செயல்படுவதையும் அனைத்து தயாரிப்புகளும் நல்ல நிலையில் இருப்பதையும் கூட்டுறவு வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹாட் (கோஹிஜ்ரா) உறுதி செய்யும் என்று இஷாம் கூறினார்.

“தரத்தையும் விலையையும் நாங்கள் எப்போழுது கண்காணிப்போம். மேலும், ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு விலை குறைப்பு விளம்பரங்களையும் செய்வோம்  என்றார்.

“எனவே, விவசாய பொருட்கள் வைத்திருக்கும் தொழில் முனைவோர் அல்லது சப்ளையர்களை தொடர்பு கொள்ள அல்லது ஏலம் எடுக்க கோஹிஜ்ராவை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் அழைக்கிறோம். இதற்கு பதிவு அடுத்த வாரம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது,” என அவர் கூறினார்.