NATIONAL

போதை ஆசாமியின் கார் மோதி போக்குவரத்து போலீஸ்காரர் காயம்

ஜோகூர் பாரு, ஜூலை 15 – மது போதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும்
ஆடவர் செலுத்திய கார் மோதியதில் போக்குவரத்தைக் கண்காணித்து
கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் பலத்தக் காயங்களுக்குள்ளானார்.
இச்சம்பவம் பெர்மாஸ் நோக்கிச் செல்லும் பந்தாய் சாலையின் 3.6வது
கிலோ மீட்டரில் நேற்று காலை நிகழ்ந்தது.

காலை 7.05 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 30 வயதுடைய அந்த
போக்குவரத்து போலீஸ்காரருக்கு இடது இடுப்பு எலும்பில் முறிவு
ஏற்பட்டதோடு முகம், கன்னம் மற்றும் வலது கையில் காயம் ஏற்பட்டதாக
ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ரவுப்
செலாமாட் கூறினார்.

அப்பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து காரணமாக உண்டான வாகன
நெரிசலைக் கட்டுபடுத்தும் பணியில் ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட
காவல் துறை தலைமையகத்தைச் சேர்ந்த அந்த போலீஸ்காரர்
ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது என அவர் குறிப்பிட்டார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையின் வலது
தடத்தில் நின்றது. அக்காரை டிரக் மூலம் அகற்றும் பணி
மேற்கொள்ளப்பட்ட போது அதன் அருகில் அந்த போலீஸ்காரர் நின்று
கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த புரோட்டோன் வாஜா கார்
திடீரென வலது புறமிருந்து இடது புறத்திற்கு மாறி அவரை மோதித்
தள்ளியது.

இந்த மோதலின் விளைவாகக் காரின் கண்ணாடி மீது தூக்கியெறியப்பட்ட
அந்த காவலர் பின்னர் சாலையில் விழுந்தார் என அவர் நேற்று இங்கு
வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.

முப்பது வயதுடைய உள்நாட்டவரான கார் ஓட்டுநருக்கு இடது கையில்
லேசான காயங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த ஆடவரிடம் மேற்கொள்ளப்பட்ட சுவாசச் சோதனையில் அவர் மது
அருந்தியிருப்பது தெரிய வந்ததாகவும், எனினும், சிறுநீர்ச் சோதனையில்
போதைப் பொருளைப் பயன்படுத்தியதற்கான அறிகுறி தென்படவில்லை
என்றும் அவர் கூறினார்.


Pengarang :