ANTARABANGSA

டோனால்ட் ட்ரம்ப் கொலை முயற்சி- சந்தேக நபரின் காரில் வெடிபொருள் கண்டுபிடிப்பு

வாஷிங்டன், ஜூலை 15 – பென்சில்வேனியாவில் நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப்பை கொல்ல முயன்ற 20 வயது இளைஞனின்  காரில் வெடி பொருள்கள்  இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட  ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமையன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சட்ட அமலாக்கப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில்  இந்தத் தாக்குதலில் அந்த முன்னாள்  அதிபருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  இச்சம்பவத்தில்  பார்வையாளர் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்தனர் என்று அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.

தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் எனும் அந்த சந்தேக நபரின்  வாகனத்தில் இரண்டு வெடிகுண்டுகளையும் அவரது வீட்டில் மூன்றாவது வெடிகுண்டையும்  புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது.

வெடி குண்டு கண்டுபிடிப்பு தொடர்பில் மற்ற செய்தி நிறுவனங்களும் விரிவாகச் செய்தி வெளியிட்டன. ஆனால், வெடிபொருட்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் அவை வெடிகுண்டுகளா அல்லது வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களா என்பது தொடர்பானத் தகவல்களை வழங்குவதில் அந்த ஊடகங்கள்  வேறுபடுகின்றன.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர்  தேர்தலை  முன்னிட்டு டிரம்ப் பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் உளவுப் பிரிவு ஏஜெண்டுகளால்  சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவ்வாடவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை.

க்ரூக்ஸ் என்பவர்தான் இந்த  துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் என்பதை எஃப்.பி.ஐ. எனப்படும் உளவுப் பிரிவினர் கடந்த சனிக்கிழமை கண்டு பிடித்தனர்.

இந்த படுகொலை முயற்சி குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளால்  விளக்கமளிக்கப்பட்டது.


Pengarang :