NATIONAL

சொத்து மறு மதிப்பீடு அதன் மதிப்பை உயர்த்தும்- மந்திரி புசார்

கோம்பாக், ஜூலை 15 – ஊராட்சி மன்றங்கள் தற்போது மேற்கொண்டு
வரும் சொத்து மறு மதிப்பீட்டு நடவடிக்கையானது மாநிலத்திலுள்ள
சொத்துடைமையாளர்கள் தங்கள் சொத்துகளை நிர்வகிப்பதில் ஒரு
வழிகாட்டியாகவும் விளங்கும்.

மிகவும் அவசியமானது எனக் கருதப்படும் இந்த சொத்து மறுமதிப்பீட்டு
நடவடிக்கை வரி உயர்வுக்கு வழி வகுத்த போதிலும் குடியிருப்பாளர்களின்
சொத்துகளின் மதிப்பையும் உயர்த்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த சொத்து மதிப்பீட்டை நாம் மேற்கொள்ளாவிட்டால் உறுதியான
மற்றும் செல்லத்தக்க வழிகாட்டியை நாம் பெற இயலாது. இந்த
சொத்துகள் பல ஆண்டுகளாக மறு மதிப்பீடு செய்யப்படவில்லை. மதிப்பு
உயர்வுக்கு மத்தியிலும் அவர்களின் சொத்துகள் 30 ஆண்டுகளுக்கு
முந்தைய மதிப்பை மட்டுமே கொண்டுள்ளன. கொள்முதல், விற்பனை
மற்றும் வாடகை என வரும் போது அதன் மதிப்பு துல்லியமானதாக
இருப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் சொத்து மதிப்பீடு
துல்லியமான மற்றும் நம்பகமான வழிகாட்டியை வழங்க உதவும். வரி
உயர்வு இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். எனினும், வரி
உயர்வை 15 முதல் 20 விழுக்காட்டிற்கு உட்பட்டிருப்பதை உறுதி
செய்வதற்கான செயல்முறை வகுத்துள்ளோம் என்றார் அவர்.

இந்த வரி உயர்வு மூலம் பெறப்படும் தொகை, பொது வசதிகளை
பராமரிப்பதற்கு ஏற்படும் செலவுகளை ஊராட்சி மன்றங்கள்
ஈடுசெய்வதற்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

ஊராட்சி மன்றங்கள் வசூலிக்கும் தொகையில் 80 விழுக்காடு குப்பைகளை
அகற்றுவதற்கு செலவாகி விடுகிறது. திடல்கள் மற்றும் சமூக மண்டபங்களை அமைப்பதற்கு நிதி இல்லாத சூழல் ஏற்படுகிறது. இருந்த போதிலும் இந்த வரி உயர்வுக்கு எதிரான ஆட்சேபனைகளை செவிமடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறினார்.


Pengarang :